டில்லி
நாளை கிர்கிஸ்தான் மாநாட்டுக்கு செல்ல உள்ள மோடி பயணம் செய்யும் விமானம் பாகிஸ்தான் வான்வழியாக செல்லவில்லை என அறிவிக்கபட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி அன்று புல்வாமாவில் பாகிஸ்தான் ஆதரவு இயக்கமான ஜெய்ஷ் ஈ முகமது தீவிரவாத இயக்கம் நடத்திய தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்க இந்திய விமானப்படை பாலகோட்டில் தாக்குதல் நடத்தியது. அதன் பிறகு பாகிஸ்தான் தனது விண்வெளியில் இந்திய விமானங்கள் பறக்க தடை விதித்தது.
கிரிகிஸ்தானில் நாளை ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு நடைபெறுகிறது. இதில் இந்திய பிரதமர் மோடி கலந்துக் கொள்கிறார். இதை ஒட்டி பாகிஸ்தானிடம் மோடியின் விமானம் அந்நாட்டு விண்வெளியில் பறந்து செல்ல இந்தியா அனுமதி கோரியது. பாகிஸ்தான் அரசு அதற்கு அனுமதி அளித்தது. அதை ஒட்டி மோடியின் விமானம் பாகிஸ்தான் விண்வெளியில் பறக்கும் என அறிவிக்கப்பட்டது.
தற்போது இந்திய பிரதமர் மோடி கிர்கிஸ்தான் செல்லும் விமானம் பாகிஸ்தான் வழியாக செல்லாது என இந்திய வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்த விமானம் ஈரான் அல்லது ஓமன் வழியாக செல்வதாக முடிவெடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.