காத்மண்டு: திடீர் மரணங்கள் மற்றும் எதிர்பாராத விபத்துகள் போன்றவை நேர்ந்தாலும், எவரெஸ்ட் சிகரத்தை நோக்கி செல்லும் கூட்டம் குறைந்தபாடில்லை.

இப்படி கூட்டம் கூடுவது குறித்து, எவரெஸ்டில் ஏறிய, இந்தியாவைச் சேர்ந்த ஒரு சாகச விரும்பியிடம் பேசியபோது அவர் கூறியதாவது, “உலகில் இருப்பது ஒரேயொரு எவரெஸ்ட் சிகரம்தான். அதில் ஏறுவதில் ஆபத்தும் உண்டுதான். ஆனால், அதற்கேற்ற வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது நம்முடைய பொறுப்பாகும்.

ஒவ்வொரு மலையேறும் வீரரும் வீராங்கனையும், ஏஜென்சிகளும், ஷெர்பாக்களும் (மலையேறுவதற்கு வழிகாட்டும் மலைவாழ் மக்கள்) தங்களுடைய பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும்.

எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுவதற்கு ஒருவருக்கு ரூ.30 லட்சம் செலவாகிறது. இதிலே, ரூ.10 லட்சம் நேபாள அரசிற்கு சென்று விடுகிறது. எனவே, ஏற்பாட்டாளர்களுக்கு இந்த இடத்தில் பணம்தான் குறியாக இருக்கிறதே ஒழிய, ‍முறையான மற்றும் பாதுகாப்பான ஏற்பாடுகளை மலையேறும் சாகசகாரர்களுக்காக செய்துதர வேண்டும் என்ற அக்கறையெல்லாம் அவர்களுக்கு கிடையாது.

அங்கே போதுமான ஏஜென்சிகளோ, தேவையான ஷெர்பாக்களோ இருப்பதில்லை. ஆனால், பணத்தை வாங்கிக்கொண்டு வரும் கூட்டத்திற்கெல்லாம் அனுமதியளித்து விடுகிறார்கள். எனவே, இது மனித தவறுதானே ஒழிய, மலையின் தவறு அல்ல” என்றார்.