லண்டன்: டிஆர்எஸ் முறையில் ‘அம்பயர்ஸ் கால்’ மற்றும் எச்சிலுக்கு நிரந்தர தடை உள்ளிட்ட விஷயங்கள் குறித்து, ஐசிசி அமைப்பிற்கு, பல்வகைப்பட்ட கருத்துக்களை அனுப்பியுள்ளது எம்சிசி உலக கிரிக்கெட் கமிட்டி என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியா – இங்கிலாந்து இடையே சென்னையில் நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட்டிற்கு, ‘அம்பயர்ஸ் கால்’ அடிப்படையில் அவுட் கொடுக்கப்படவில்லை. இது சர்ச்சையை ஏற்படுத்தியது. எனவே, இதுகுறித்து லண்டனிலுள்ள எம்சிசி உலக கிரிக்கெட் கமிட்டி கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இந்த அமைப்பிற்கு இலங்கை முன்னாள் கேப்டன் சங்ககாரா தலைவராக இருக்கிறார்.
இந்த அமைப்பில், முன்னாள் சர்வதேச கேப்டன்கள், போட்டி அதிகாரிகள் மற்றும் பயிற்சியாளர்கள் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். இந்த அமைப்பின் சில உறுப்பினர்கள், ‘அம்பயர்ஸ் கால்’ நடைமுறையானது, பொதுமக்களை குழப்புவதாக குறிப்பிட்டுள்ளனர். எனவே, டிஆர்எஸ் விண்ணப்பிக்கப்பட்டால், ‘அவுட்’ அல்லது ‘நாட் அவுட்’ என்ற எளிமையான முறையே மீண்டும் அமல்படுத்தப்படும் வகையில் முடிவு எடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
அதேசமயம், வேறு உறுப்பினர்கள், இந்த நடைமுறையில் திருப்தி தெரிவித்திருப்பதுடன், இதுகுறித்த முடிவை ஐசிசி அமைப்பிடமே விட்டுள்ளனர்.
மேலும், பந்தை பளபளப்பாக்க, எச்சில் பயன்படுத்துவதற்கு தற்போது தற்காலிக தடை உள்ளது. இந்நிலையில், இதை நிரந்தர தடையாக மாற்றுவது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.