மயிலாடுதுறை
மயிலாடுதுறையில் 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் மகா புஷ்கரம் விழாவுக்கு பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
கடந்த மாதம் 12ந்தேதி தொடங்கி 24ந்தேதி வரை 12 நாட்கள் விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவுக்கு வரும் பக்தர்கள் நிராட காவிரி ஆற்றில் பல இடங்களில் சிமெண்ட் தொட்டி கட்டப்பட்டிருந்தது. காவிரி ஆற்றினுள், துலாக்கட்டம் பகுதியில் 100மீட்டர் நீளம் மற்றும் 17 மீட்டர் அகலத்திற்கு பெரிய சிமெண்ட் தொட்டி அமைக்கப்பட்டது. இதிலிருந்து பக்தர்கள் தண்ணீர் எடுத்து நீராடினர்.
தற்போது விழா முடிந்து ஒரு மாதம் ஆகும் நிலையில், இதுவரை அந்த தொட்டிகள் அகற்றப்படாமல் இருந்துள்ளது. தற்போது காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் நிலையில், ஆற்றுக்குள் கட்டப்பட்டிருந்த சிமெண்ட் தொட்டி நீருக்குள் மூழ்கி இருக்கும் இடம் தெரியாத நிலையில் உள்ளது.
இந்நிலையில், மயிலாடுதுறை பகுதியை சேர்ந்த பாஸ்கர் மற்றும் அவரது 14 வயது மகன் பாலகுரு இருவரும் காவிரி ஆற்றில் குளிக்கச் சென்றுள்ளனர்.
அப்போது எதிர்பாராதவிதமாக பாஸ்கரின் மகன் பாலகுரு, காவிரி புஷ்கர் விழாவிற்காக அமைக்கப்பட்ட சிமெண்ட் தொட்டிக்குள் சிக்கி தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார்.
இது மயிலாடுதுறை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த தொட்டியை அகற்ற வேண்டும் அல்லது அதை சுற்று பாதுகாப்பு வேலி அமைக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.