லக்னோ
அல்கொய்தா தீவிரவாதிகள் உத்தரப்பிரதேச மாநிலத்தில் கைது செய்யப்பட்டது குறித்து பகுஜன் சமாஜ் தலைவி மாயாவதி சந்தேகம் எழுப்பி உள்ளார்.
நேற்று முன் தினம் உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோ நகரில் அல்கொய்தா தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர். அந்த தீவிரவாதிகளிடம் இருந்து ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த கைது மூலம் தீவிரவாதிகள் நடத்த இருந்த தற்கொலைப்படை தாக்குதல் சதி முறியடிக்கப் பட்டதாக உத்தரப்பிரதேச காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்த தீவிரவாதிகள் கைது சம்பவம் நாடெங்கும் கடும் பரபரப்பை உண்டாக்கி உள்ளது. இது குறித்து சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கடும் விமர்சனத்தைத் தெரிவித்து இருந்தார். அவர், “இந்த விவகாரத்தில் உத்தரப்பிரதேச காவல்துறையினரை நம்ப முடியாது. குறிப்பாக உத்தரப்பிரதேச பாஜக அரசைச் சிறிதும் நம்ப முடியாது” எனத் தெரிவித்து இருந்தார்.
இதை அடுத்து பகுஜன் சமாஜ் கட்சித் தலைவி மாயாவதி டிவிட்டரில், “லக்னோ நகரில் தீவிரவாதிகள் சதி திட்டம் முறியடிக்கப்பட்டது உண்மையெனில், இது மிகவும் முக்கியமான ஒன்றாகும். அதே வேளையில் இதில் எந்த அரசியலும் செய்யக்கூடாது. விரைவில் உத்தரப்பிரதேச சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில் இதுபோன்ற நடவடிக்கைகள் மக்கள் எண்ணத்தில் சந்தேகத்தை உருவாக்கும்.
இத்தகைய கைது நடவடிக்கைக்குப் பின் ஏதாவது உண்மை இருக்குமானால், காவல்துறையினர் ஏன் இவ்வளவு காலமாக இந்த செயல்பாடுகளை மறந்துவிட்டனர்? என்னும் கேள்வியை மக்கள் நிச்சயம் எழுப்புவார்கள். ஆகவே அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காவிட்டால் மக்களிடையே இது அமைதியின்மையை ஏற்படுத்தும்” எனப் பதிந்துள்ளார்.