லக்னோ:
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதால், தலித்களுக்கு எந்தப் பலனும் கிடையாது என்று பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார்.
உத்திரப்பிரதேசம் மாநிலம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய ராமஜென்மபூமி – பாபர் மசூதி இடத்தில் ராமர் கோயில் கட்டுவது குறித்த சர்ச்சை நீண்டகாலமாக தொடர்கிறது.
இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தல் நடந்து வருகிறது. இந்தப் பிரச்சினைக்கு பேச்சு வார்த்தை மூலம் தர்வு காண வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் யோசனை தெரிவித்தது. இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் ஷியா வக்பு வாரியத்தின் தலைவர், சையத் வாஷிம் ரிக்வி, “பல்வேறு தரப்பினரிடமும் ஆலோசனை நடத்திய பிறகு அயோத்தியில் ராமர் கோயிலை கட்டிக்கொள்ளலாம். பாபர் மசூதியை லக்னோவில் கட்டிக்கொள்ள தயாராகி வருகிறோம்” என்று சில நாட்களுக்கு முன் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து அயோத்தியில் விரைவில் ராமர் கோயில் கட்டப்படும் என்று இந்துத்துவ அமைப்புகள் பேசி வருகின்றன.
இந்த நிலையில் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி, “ அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதால், தலித்களுக்கு எந்தவித பலனும் ஏற்படப் போவது கிடையாது. அயோத்தி மட்டுமின்றி, நாட்டில் எங்கு கோவில் கட்டினாலும், தலித்களுக்கு உரிமையோ, மரியாதையோ கிடைக்கப் போவதில்லை. ஹிந்துத்வா என கூறி, மக்களை ஏமாற்ற, பா.ஜ., முயற்சிக்கிறது.” என்று தெரிவித்துள்ளார்.