பெங்களூரு

ம்பேத்கார் பெற்றுத் தந்த இட ஒதுக்கீட்டை பா ஜ க ஒழிக்க எண்ணுவதாக மாயாவதி குற்றம் சாட்டியுள்ளார்.

பெங்களூருவில் நேற்று பகுஜன் சமாஜ் கட்சியின் தென்னிந்திய மாநாடு நடந்தது.  இதில் அக்கட்சியின் தலைவர் மாயாவதி தலைமை தாங்கினார்.  தமிழ்நாடு, பாண்டி, ஆந்திரா, கர்னாடகா, கேரளா ஆகிய மாநிலங்களிலிருந்து லட்சக்கணக்கான தொண்டர்கள் கலந்துக் கொண்டனர்.  இந்த மாநாட்டில் மாயாவதி உரையாற்றினார்.

மாயாவதி தனது உரையில், ”தற்போது சாதி, மத மோதல் பெரிதும் தூண்டிவிடப் படுகிறது.  இதன் மூலம் தலித், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் ஆகியோரை பிரிக்க சதி செய்யப்படுகிறது.    அமைதிப் பூங்காவாக இருந்த உத்திரப் பிரதேசத்தில் சாதி மற்றும் மதக் கலவரங்களை பா ஜ க தூண்டி விடுகிறது.  பா ஜ க ஆட்சியில் தலித் மக்கள் பெரிதும் வன்முறைத் தாக்குதலுக்கு உள்ளாகிறார்கள்.

நான் இந்த விவகாரம் குறித்து பாராளுமன்றத்தில் பேச முயன்றேன்.  என்னை பா ஜ கவினர் தடுத்து விட்டனர்.  இதே போல அம்பேத்கார் 60 ஆண்டுகளுக்கு முன்பு பேச முற்பட்டபோது அவரும் தடுக்கப்பட்டார்.  அதனால் அவர் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தது போல் நானும் எனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தேன்.  அம்பேத்காரைப் போல பகுஜன் சமாஜ் கட்சியும் தலித் மற்றும் பழங்குடியினருக்கு மட்டும் இல்லாமல் அனைத்து பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் சிறுபான்மையினருக்கும் ஆதரவாக போராடி வருகிறது.   ஆனால் ஆளும் பாஜக, மற்றும் ஆண்டுக்கொண்டிருந்த காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து மக்களை பிரிக்க முற்பட்டுள்ளன.

பகுஜன் சமாஜ் கட்சியின் ஆதரவுடன் பதவி ஏற்ற வி பி சிங் அரசு, மண்டல் கமிஷன் மூலம் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27% இட ஒதுக்கீடு அளித்ததை நினைவில் கொள்ள வேண்டும்.  இன்று இதே பகுஜன் சமாஜ் கட்சியை சீர்குலைக்க இந்துத்துவ அமைப்பை சேர்ந்த பிற்படுத்தப் பட்டோர்களில் சிலர் முனைந்து வருகின்றனர்.  அரசு தனது கட்டுப்பாட்டில் உள்ள பல துறைகளை தனியாருக்கு அளித்து வருகிறது.  இதனால் இட ஒதுக்கீட்டின் கீழ் வரும் தலித், பழங்குடியினர், பிற்படுத்தப் பட்டவர்கள் பெரும் பாதிப்பு அடைந்துள்ளனர்.  பா ஜ க அரசின் இந்தப் போக்கை மக்கள் நாம் இணைந்து தடுத்தாக வேண்டும்.  அம்பேத்கார் வாங்கித் தந்த அரசியல் உரிமையை நிலைநாட்ட போராட வேண்டும்” என தெரிவித்துள்ளார்.