சென்னை:

சென்னை அண்ணாசாலையில் அமைந்துள்ள திமுக தலைமையகமான  அண்ணா அறிவாலய வளாகத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தை கொரோனா வார்டாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தமிழகஅரசிடம்  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஒப்புதல் கடிதம் வழங்கி உள்ளார்.

திருச்சியில் உள்ள திமுக தலைமையகத்தையும் கொரோனா வார்டாக செயல்பட அனுமதி வழங்கி, முன்னாள் திமுக அமைச்சரும், திமுக முதன்மை செயலாளருமான  கே.என்.நேரு, திருச்சிமாவட்ட ஆட்சியரிடம் கடிதம் வழங்கினார்.

கொரோனா பாதிப்பு இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை  கொரோனாவால் 1,124 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்,  32 பேர் பலியாகி உள்ளனர். தமிழகத்தை பொருத்தவரை கொரோனா வைரசுக்கு இதுவரை ஒருவர் மட்டுமே உயிரிழந்துள்ளார். 67 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள்  அதிகரித்து வரும் நிலையில்,  கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க போதிய வசதியின்மை பெரும் தலைவலியாக மாறி உள்ளது.

இதையடுத்து, ரயில்பெட்டிகள் வார்டுகளாக மாற்றப்பட்டு வருகிறது. மேலும் பல தனியார் கல்லூரிகள், தனியார் நிறுவனங்கள், திரையுலகினர் தங்களுக்கு சொந்தமான இடங்களை வார்டுகளாக மாற்றி சிகிச்சை அளிக்க அனுமதி கொடுத்துள்ளனர்.

இந்த நிலையில், அண்ணா அறிவாலய வளாகத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தை கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்த பயன்படுத்தி கொள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஒப்புதல் அளித்துள்ளார்.

இதற்கான  ஒப்புதல்கடித்தை, சென்னை மாநகராட்சி ஆணையர் ஜி.பிரகாஷிடம் திமுக சார்பில் எம்.எல்.ஏ.க்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு ஆகியோர் வழங்கினார்.

அதுபோல திருச்சியில் உள்ள திமுக தலைமையகத்தையும் கொரோனா வார்டாக செயல்பட அனுமதி வழங்கி, முன்னாள் திமுக அமைச்சரும், திமுக முதன்மை செயலாளருமான  கே.என்.நேரு, திருச்சிமாவட்ட ஆட்சியரிடம் கடிதம் வழங்கினார்.

முன்னதாக, கொரோனாவை தடுக்க முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் ரூ.1 கோடி நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது.

கொரோனா நோய் தடுப்பு, நிவாரண பணிகளுக்கு ஆன்லைனில் நிதி வழங்கப்படும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். மேலும், அத்தியவாசிய தேவைகள் கிடைக்காமல் சிரமப்படுவர்கள் உதவிக்கு தொடர்பு கொள்ள திமுக இளைஞர் அணி சார்பில் 93618 63559 என்ற எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.