இந்திய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 10ஆம் தேதி ஓய்வு பெறுகிறார் இருப்பினும், வார இறுதி விடுமுறையை அடுத்து இன்று (நவம்பர் 8 ) அவரது கடைசி வேலை நாள் என்பது குறிப்பிடத்தக்கது.

2022 நவம்பர் 9, அன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்ற நீதிபதி சந்திரசூட் அவர்களுக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று மாலை பிரிவு உபச்சார விழா நடைபெற்றது.

அப்போது பேசிய அவர் “நாளையிலிருந்து என்னால் நீதியை வழங்க முடியாது, ஆனால் நான் திருப்தி அடைகிறேன்” என்று கூறினார்.

உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதிகளை நினைவு கூர்ந்த அவர், “நாம் செய்யும் செயலால் வழக்குகள் உருவாகலாம் அல்லது தீர்க்கப்படலாம்” என்று பேசிய தலைமை நீதிபதி, “நான் நீதிமன்றத்தில் யாரையாவது புண்படுத்தியிருந்தால், அதற்காக என்னை மன்னியுங்கள்,” என்று கூறினார்.

மேலும், “எனது தவறுகள் அனைத்தும் மன்னிக்கப்படட்டும்” என்ற பொருள்படும் “மிச்சாமி துக்கடம்” என்ற ஜைன வாக்கியத்தை மேற்கோள் காட்டினார்.

“மிகவும் ட்ரோல் செய்யப்பட்ட நீதிபதிகளில் ஒருவராக இருந்த தான் ஓய்வு பெறுவதை அடுத்து என்னை ட்ரோல் செய்த அனைவரும் வேலையில்லாமல் போய்விடுவார்கள்” என்றும் “திங்கட்கிழமை முதல் என்ன நடக்கும் என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன்” என்று தலைமை நீதிபதி சந்திரசூட் நகைச்சுவையாகக் கூறினார்.

நீதித்துறையின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை பாதுகாக்க ஓய்வுபெற்ற தலைமை நீதிபதிகளை எந்த ஒரு வழக்கிலும் வாதாட அனுமதிக்கும் நடைமுறை தடை செய்யப்பட்டுள்ளது.

இருந்தபோதும், ஓய்வு பெற்ற தலைமை நீதிபதிகள் பெரும்பாலும் சிக்கலான சட்ட விஷயங்களுக்கு தீர்ப்பாயம் அல்லது நடுவர்களாக நியமிக்கப்படுகிறார்கள். தேசிய மனித உரிமைகள் ஆணையம் அல்லது தேசிய பசுமை தீர்ப்பாயம் போன்ற கமிஷன்களுக்கு தலைமை தாங்குகிறார்கள் அல்லது உறுப்பினராகிறார்கள்.

ஆளுநர்கள் அல்லது அரசாங்கக் குழுக்களின் உறுப்பினர்கள் போன்ற அரசியலமைப்புப் பதவிகளில் ஓய்வுபெற்ற நீதிபதிகள் நியமிக்கப்படுவதும் வழக்கமான நடைமுறையாக உள்ள நிலையில் நீதிபதி சந்திரசூட் அடுத்து என்ன செய்யப்போகிறார் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.