சென்னை: கடந்த 24 மணி நேரத்தில், கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில் அதிகபட்சமாக 503 மி.மீ., மழைப்பதிவாகி உள்ளது. மழை வெள்ளத்தில் அந்த பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் அடித்துச்செல்லப்பட்ட சோகம் நடைந்தேறியுள்ளது.

பெஞ்சல்  புயல்  சென்னையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என பொதுமக்கள் அச்சம் கொண்டிருந்த நிலையில்,  அது கடைசி நேரத்தில் திசை மாறிச்சென்றது. இதனால், விழுப்புரம், கடலூர், புதுச்சேரி கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், தொடர்ந்து,  வட மாவட்டங்களில் தனது கோர முகத்தை காட்டி வருகிறது. இதன்  காரணமாக, புதுச்சேரி, விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி  உள்ளிட்ட மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது. திண்டிவனம் அடுத்த மயிலத்தில், வரலாறு காணாத வகையில், 510 மி.மீ., மழை பெய்தது. ஏரி உடைந்ததால், திண்டிவனம் நகரம் வெள்ளத்தில் மிதந்தது. வெள்ளம் பாதித்த பகுதிகளில், மீட்புப் பணியில் துணை ராணுவப் படையினர் ஈடுபட்டனர்.

இதன் தொடர்ச்சியாக,  கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக பெரும்பாலான பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக் கின்றன. கிருஷ்ணகிரி பழையபேட்டை நேதாஜி சாலை, பகுதியில் மழை நீர் கழிவு நீருடன் கலந்து வீடுகளுக்குள் புகுந்தது. கிருஷ்ணகிரி நகர் மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதிகளில் மாவட்ட கலெக்டர், அதிகாரிகள் தனி குழுக்களாக பிரிந்து வெள்ள நீரை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

மேலும்,  கிருஷ்ணகிரி  டோல்கேட், சேலம் மேம்பாலம், திருவண்ணாமலை மேம்பாலம், பழைய பஸ் ஸ்டாண்ட், பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சாலைகளில் மழை நீர் தேங்கி கடல் போல் காட்சி அளிக்கிறது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில்,  ஊத்தங்கரை ஊத்தங்கரை பகுதியில் 24 மணி நேரமாக கொட்டி தீர்த்த கனமழையால் காமராஜ் நகர், எம்.ஜி. ஆர்., நகர் பகுதிகளில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது இதனால் அப்பகுதி மக்களை தீயணைப்பு துறையினர் மீட்டு மீட்பு முகாம்களில் தங்க வைத்துள்ளனர்.

மேலும் அங்குள்ள பாம்பாறு அணை தனது முழு கொள்ளளவை எட்டியதால் வினாடிக்கு 15 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் பாம்பாறு அணை பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது .

போச்சம்பள்ளி பகுதியில் கோனானூர் ஏரி நிரம்பி அதிக அளவில் தண்ணீர் வெளியேறியதால், போச்சம்பள்ளி நான்கு ரோடு சந்திப்பு, சமத்துவபுரம் உள்ளிட்ட பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. சமத்துவபுரத்தில் வசிக்கக்கூடிய மக்கள் அனைவரும் தீயணைப்புத் துறையினால் மீட்கப்பட்டு மீட்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்

போச்சம்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஏரிகள் நிரம்பி, உபரி நீர் போச்சம்பள்ளி நான்கு ரோடு சந்திப்பில் உள்ள குடியிருப்புகள் வணிக வளாகங்களில் புகுந்து உள்ளது. தர்மபுரி- திருப்பத்தூர் சாலையில் மழைநீர் குளம் போல தேங்கியுள்ளதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக,  பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வீடுகளை முடங்கி உள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில், பதிவான மழை விபரம் மில்லி மீட்டரில் பின்வருமாறு: ( 1செ.மீ.,= 10 மி.மீ.,)

கிருஷ்ணகிரி மாவட்டம்

ஊத்தங்கரை- 503 மி.மீ.,

 ஜம்புகுட்டபட்டி- 250 மி.மீ.,

 போச்சம்பள்ளி 250 மி.மீ.,

பாம்பாறு அணை- 210 மி.மீ.,

 பரூர் 200 மி.மீ.,

பெனுகொண்டபுரம் 190 மி.மீ.,

 நெடுங்கல் 140 மி.மீ.,

கிருஷ்ணகிரி நகர்- 110 மி.மீ.,

கே.ஆர்.பி., அணை பகுதி – 100 மி.மீ.,

சேலம், ஏற்காடு- 238 மி.மீ.,

தர்மபுரி, அரூர்- 330 மி.மீ.,

கள்ளக்குறிச்சி மாவட்டம்

திருப்பாலபந்தல் – 320 மி.மீ.,

மாதம்பூண்டி- 310 மி.மீ.,

வேங்கூர் – 267 மி.மீ.,

திருக்கோவிலூர் – 262 மி.மீ.,