சென்னை:
டந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இடிந்துவிழுந்து 61பேரை பலி வாங்கிய கட்டிடத்தின் இணை கட்டிடமான 11 மாடி கட்டிடம் நாளை இடிக்கப்படுகிறது.
இதையொட்டி அந்த பகுதி மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். அந்த பகுதியில் உள்ள தனியார் மற்றும் அரசு பள்ளிகளுக்கு இன்றும், நாளையும் விடுமுறை விடப்பட்டு உள்ளது.
 
சென்னை போரூரை அடுத்த மவுலிவாக்கத்தில் கட்டப்பட்டு வந்த 11 மாடி கொண்ட இரண்டு அடுக்கு மாடி குடியிருப்பில் ஒரு கட்டிடம் கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் 28-ந்தேதி திடீரென இடிந்து விழுந்தது.
அதன் அருகே இருந்த 61 தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கி பலியானார்கள்.

அதன் அருகே உள்ள  மற்றொரு 11 மாடி கட்டிடத்தை ஆய்வு செய்தபோது அது மக்கள் குடியேற முடியாதபடி பலவீனமாக இருப்பது தெரியவந்தது.
இது தொடர்பான வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு அந்த 11 மாடி கட்டிடத்தை இடிக்க உத்தரவிட்டது. இதற்கான நடவடிக்கையில் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் (சி.எம்.டி.ஏ.) அதிகாரிகள் இறங்கினர்.
கட்டிடத்தை வெடி வைத்து இடிக்க முடிவு செய்து அதற்கான பணிகள் திருப்பூரை சேர்ந்த தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது.இதற்காக 11 மாடி கட்டிட தூண்களில் வெடிமருந்து நிரப்ப துளைகள் போடப்பட்டன. கட்டிடத்தை சுற்றி 100 மீட்டர் தொலைவில் உள்ள வீடு, கடைகள் கணக்கெடுக்கப்பட்டன. இதில் 124 வீடு-கடைகள் இருப்பது தெரியவந்தது.இதையடுத்து செப்டம்பர் 25-ந்தேதி கட்டிடம் வெடி வைத்து இடிக்கப்படும் என்று அறிவித்தனர். ஆனால் இடிப்பு பணி திடீரென தள்ளி வைக்கப்பட்டது. அதற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை.
மழை காலத்துக்கு முன்பே கட்டிடத்தை இடிக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் 11 மாடி கட்டிடம் நாளை வெடி மருந்து வைத்து இடிக்கப்படும் என்று சி.எம்.டி.ஏ. அறிவித்தது. நாளை பிற்பகல் 2 மணி முதல் 4 மணிக்குள் இடிக்கப்படுகிறது.
வெடிமருந்துகள் நிரப்புவதற்காக கட்டிடத்தின் கீழ் தளம், 5-வது தளத்தில் உள்ள 54 தூண்களில் துளைகள் போடப்பட்டுள்ளன. அவைகளில் வெடி மருந்துகள் நிரப்பி வெடிக்க வைக்கும் போது கட்டிடம் அதே இடத்தில் உள்நோக்கி இடிந்து விழுந்து விடும். நவீன தொழில் நுட்பத்துடன் பாதுகாப்பான முறையில் இப்பணியை கையாளுகிறார்கள்.
இடிப்பு பணிக்கு பயன்படுத்தப்படும் வெடி மருந்துகள் இன்றுகாலை 2 வாகனங்களில் கொண்டு வரப்பட்டது. அவை கட்டிட வளாகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. நாளை காலையில் தூண்களில் உள்ள துளையில் வெடி மருந்தை நிரப்புவார்கள். இந்த பணி முடிந்ததும் கட்டிடம் முழுமையாக இடிக்கப்படும்.
11 மாடி கட்டிடம் இடிக்கப்பட போகும் தகவல் அப்பகுதி மக்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து கட்டிடத்தை சுற்றி 100 மீட்டர் தொலைவில் வசிக்கும் பொதுமக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு வருகிறார்கள்.
இடிக்கப்படுவதற்கு முன்பு போலீஸ் மற்றும் மாவட்ட நிர்வாகமும் இணைந்து அங்குள்ள அனைத்து மக்களும் வெளியேறி விட்டார்களா என்று உறுதி செய்தபிறகு இடிப்பு பணி தொடங்கும்.
வெளியேற்றப்படும் மக்கள் இலவச பஸ்கள் மூலம் மதனந்தபுரம் பிரதான சாலையில் உள்ள ஸ்ரீ எஸ்.ஏ.கே. ஜெய்மாருதி மஹாலுக்கு அழைத்து செல்லப்பட்டு தங்க வைக்கப்படுகிறார்கள்.
கட்டிடத்தை இடித்த பிறகு மாலையில் பொதுமக்கள் வாகனங்களில் அவரவர் வீடுகளுக்கு திருப்பி அழைத்து வரப்படுவார்கள்.
கட்டிடம் இடிக்கப்படுவது பற்றி அறிந்ததும் சிலர் இன்றே வீடுகளை பூட்டி விட்டு உறவினர் வீடுகளுக்கு சென்று விட்டனர்.
மவுலிவாக்கத்தில் உள்ள அரசு பள்ளி மற்றும் தனியார் பள்ளிக்கு இன்றும், நாளையும் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.
இன்று காலை சி.எம்.டி.ஏ. உறுப்பினர் விஜயராஜ் சமார் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
மவுலிவாக்கம் பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. 4 தீயணைப்பு வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.
அங்கு நாளை காலை முதல் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. மதனந்தபுரம், பட்டூர், மாங்காடு வழியாக வாகனங்கள் திருப்பி விடப்படுகின்றன.
இதனால் மவுலிவாக்கம் பகுதியில் வாகன போக்குவரத்து முற்றிலும் தடுக்கப்படும்.
சி.எம்.டி.ஏ. வெளியிட்ட அறிக்கையில் கட்டிடம் இடிக்கப்படுவது குறித்து பொதுமக்கள் எவ்வித அச்சமோ, பீதியோ அடைய வேண்டாம் என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.