பிரிட்டன் சுகாதாரத் துறை செயலாளராக இருந்த மேட் ஹன்காக் தன்னிடம் உதவியாளராக பணிபுரிந்த கினா கொலடங்கேலோ என்ற 43 வயது மதிக்கத் தக்க பெண்ணை கட்டியணைத்து முத்தம் கொடுத்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் ஒன்றாக படித்தவர்களான இவர்கள் இருவரும் தங்கள் அலுவலகத்தில் யாருக்கும் தெரியாமல் கட்டிப்பிடித்து குலாவிக்கொண்டிருந்த சி.சி.டி.வி. காட்சிகள் பத்திரிகைகளில் வெளியானது.
உறவினராகவோ, ரத்த சொந்தமாக இருந்தாலும், எந்த ஒரு சந்தோஷத்தையும் துக்கத்தையும் வெளிப்படுத்த கட்டிப்பிடிப்பதோ முத்தமிடுவதோ கூடாது என்ற சுகாதார அமைச்சகத்தின் கொரோனா விதிமுறைகளை மீறி நடந்துகொண்ட மேட் ஹன்காக்-கை பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் பதவி நீக்கம் செய்யவேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
இந்த விவகாரம் பத்திரிகைகளில் வெளியான உடன் கினா கொலடங்கேலோ தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டார், ஆனால் பிரிட்டனில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த திறமையாக செயலாற்றிய ஹன்காக் மீது நடவடிக்கை எடுக்கப்போவதில்லை என்று போரிஸ் ஜான்சன் உறுதியாக இருந்தார்.
— Matt Hancock (@MattHancock) June 26, 2021
எதிர்க்கட்சியினரின் தொடர் அழுத்தம் காரணமாக மேட் ஹன்காக் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார், இதுகுறித்து பிரதமருக்கு தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பிவைத்தார்.
அவரது ராஜினாமாவை ஏற்றுக்கொண்ட பிரதமர், சஜித் ஜாவித்-தை சுகாதாரத் துறை செயலாளராக நியமித்தார், சஜித் ஜாவித் இதற்கு முன் உள்துறை செயலாளராகவும், அரசு கருவூல தலைமை அதிகாரியாகவும் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.