மற்றொரு கோணத்தில்..

கவிதை

– பா.தேவிமயில் குமார்

பாட்டி வீடு

மட்டுமல்ல,

பக்கத்து

வீடும் தூரமானது!

 

வீட்டிலா? நானா? என்ற

வீரமகன்கள்

வீட்டு வேலையில்

உதவுகின்றனர்!

 

கடையைத் தவிர

மற்றப்பொருட்களை,

கதவருகில் கொண்டுவந்து

கூவிக் கூவி விற்கின்றனர்!

 

சூரியனின் சுடர் படாத

பூமியைப் போல,

சின்னக் குழந்தைகளில்லாத

பள்ளிக் கூடங்கள்!

 

கை, கால் அலம்பச் சொன்ன

முன்னோர்களின்

காலடிச் சுவடுகளை

கைக் கொள்கிறோம்!

 

ஆங்கில மோகம்

அதிகமே, மருந்திலும் கூட!

அட, நாட்டு மருத்துவம்

இன்று நடைமுறையானது!

 

தொலைதூரத்தில், கால்கள்

தேய பயணிக்கும்

தொழிலாளர்களுக்காக,

கண்ணீர் சிந்துகின்றோம்!

 

மற்ற நாட்டில் கேட்ட

மரண ஓலங்களுக்கு,

மனதின் ஆழத்திலிருந்து

அஞ்சலி செலுத்துகிறோம்!

 

பாலா பிஷேகம் செய்து

படம் ஓட்டிய காலம் போய்,

புதிய திரையில் புதிய

படம் பார்த்ததும் மறக்குமா?

 

பேரணி, ஆர்ப்பாட்டம்,

பொதுக் கூட்டமில்லாத,

புதிய வாழ்க்கை

பெரிய ஆச்சரியம் தான்!

 

பத்துப் பந்தி வைத்து

பல, லட்சம் விழுங்கிய,

“பளபள” கல்யாணங்கள்-இன்று

பத்துப்பேருடன் நடக்கிறது!

 

நகரம் கொடுத்தது

நாகரீக வாழ்க்கை! என

நினைத்தவர்கள், இன்று

ஊர் நாட்டுப் பக்கம் வந்தனர்!

 

கடைநிலை ஊழியர்,

காவல், சுகாதாரப்

பணியாளர்களை, கை கூப்பி

மரியாதை செய்கிறோம்!

 

கட்டிப் பிடித்து வாழ்த்திடும்

கலாச்சாரம் மறைந்து,

கை கூப்பி வணங்கிடும்

காலமும் வந்து விட்டது!

 

எதிர் காலத்தைப் பற்றிய

எண்ணங்கள் இருந்தது!

இப்போது நிகழ்காலம்

எவ்வாறு போகும் என யோசிக்கிறோம்!

 

மூன்றாம் உலகப்போர்

மூளுமென்றனர், ஆம்!

கொரோனாவும் கண்டிப்பாக

காலன் அனுப்பியப் போர்ப் படைதான்!

 

இறைவன் வரிசையில்

காத்திருக்கிறான்

இன்றாவது பக்தனைக்

காணமுடியுமா? என்று…

 

பாதிப்புகள் அதிகமே!

அதைவிட படிப்பினைகள் அதிகமோ, அதிகம்!

பாதுகாத்துக் கொள்வோம்

பத்திரமாக இருந்திடுவோம்!

 

– பா.தேவிமயில் குமார்