சென்னை,
அதிமுகவில் எழுந்துள்ள உள்கட்சி பிரச்சினையால் தமிழக அரசியல் களம் சூடுபிடித்து உள்ளது. தற்போது மதுசூதனின் கடிதம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக முதல்வராக ஓபிஎஸ் உள்ளார். அவரை கட்டாயப்படுத்தி ராஜினாமா கடிதம் சசிகலா தரப்பினரால் வாங்கப்பட்டது, கவர்னருக்கு அனுப்பிய ராஜினாமா கடிதத்தை வாபஸ் பெறுவேன் என்று அதிரடியாக அறிவித்தார்.
அதைத்தொடர்ந்து அதிமுகவின் அரசியல் களம் மாறத்தொடங்கியது. ஓபிஎஸ் கட்சி பொருளாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அதிமுக எம்எல்ஏக்கள் சட்டமன்ற குழு தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். அதையடுத்து தமிழக முதல்வராக பதவி ஏற்க துடித்து வருகிறார்.
இந்த நிலையில், அதிமுக அவைத்தலைவராக இருந்த மதுசூதனன் சசிகலாவிடம் இருந்து பிரிந்து, ஓபிஎஸ்சுக்கு ஆதரவு அளித்தார். அப்போது, அதிமுகவை ரவுடிகள் கும்பலில் இருந்து மீட்கவே பன்னீருடன் இணைந்துள்ளதாக அவர் தெரிவித்திருந்தார்.
இதன் காரணமாக அதிமுக அரசியல் களம் சூடுபிடித்து வருகிறது. தமிழக மக்களும், அதிமுக தொண்டர்களும் சசிகலாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இன்று அதிரடியாக தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது,
சசிகலாவை தற்காலிக பொதுச்செயலாளராக நியமிக்க அங்கீகாரம் அளிக்க கூடாது என கூறி யுள்ளார்.
அதிமுகவின் அவைத்தலைவரின் கடிதம் என்பதால் இந்த கடிதம் தேர்தல் கமிஷனால் பரிசீலிக்கப்படும் என தெரிகிறது. இதன் காரணமாக சசிகலா தரப்பு கலவரம் அடைந்துள்ளது.
அதிமுக சட்டத்தில் தற்காலிக பொதுச்செயலாளர் பதவி என்பது கிடையாது என தேர்தல் ஆணையம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.