மத்தாப்பு

கவிதை

பா. தேவிமயில் குமார்

தீபாவளியில்…..

 

எண்ணங்களெல்லாம்

எழில் நகையாய்

இதழ் விரிக்கிறது !

 

ஒரு வருடம்

உனக்காகக்

காத்துக்கிடக்கிறோம் !

ஒளியேற்றிட வா !

ஒளி நோன்பே !

 

இனிப்பாய்

இனி,

சந்தோஷங்கள்

சங்கமிக்கட்டும் !

 

எண்ணெய்

தேய்த்து

குளித்திடும்போது

இரும்பென

ஆகட்டும் தேகம் !

 

புத்தாடை

அணியும்போது

புது மகிழ்ச்சியையும்

அணிந்து கொள்வோம் !

தீபங்களின்

வரிசையில்

திசையெல்லாம்

ஒளிரட்டும் !

 

ஒருவருக்கொருவர்

வாழ்த்துக்களை

வாரிவழங்கிடுவோம் !

வளமாய்

வாழட்டும்

சமுதாயம் !

 

இன்று போல

என்றும்

மகிழ்ச்சி

மலரட்டும் என

தீபாவளி நோன்பெடுப்போம் !

வெடிக்கும் பட்டாசில்

வெளியேறட்டும், நம்

எதிர்மறை எண்ணங்கள் !

 

களையிழந்து

கிடக்கும்

மனங்களை

மெருகேற்றிடுவோம்

பண்டிகையால் !

 

சிறுவர்களுக்கு

மட்டுமா

சிரிப்பும், பட்டாசும் ?

அவர்களுடன்

சேர்ந்து நாமும்

சிந்திடுவோம்

சிரிப்பினை !

 

ஆண்டுக்கொரு

முறை வரும்

பண்டிகையில்

ஆனந்தத்தினை

அள்ளிக்கொள்வோம் !

 

அண்டை

அயலாரோடும்,

சொந்த

பந்தங்களுடனும்,

நட்புடனும்,

நல்ல உறவுடனும்,

சேர்ந்து

சிந்திடுவோம்

மகிழ்ச்சி மத்தாப்பினை !

 

நெஞ்சிலிருக்கும்

நரகாசுரனை

அனுப்பிடுவோம்

அண்டவெளிக்கு !

 

நல்ல,

இன்பம்,

இதயம்,

புன்னகை,

பூக்கள்,

சிந்தனை

சிரிப்பு,

கல்வி,

கவிதை,

மகிழ்ச்சி,

மனிதம்,

என

எல்லாவற்றையும்

எடுத்துக்கொள்வோம் !

ஏற்றம் பெறுவோம் !

 

ஒளி நோன்பே

இருள் நீக்கி

எங்களை

ஆசிர்வாதித்துப்போ !

ஆனந்தமாய் வாழ

அருள் கொடுத்துப்போ !

 

ஒளி நோன்பே,
இருள் நீக்கி
ஒளி கொண்டு வா !

 

ஆனந்தமாய் வாழ
ஆசிர்வாதம் செய்திடு !

 

லட்சுமியும்,
குபேரனும், எங்கள்
இல்லத்தில் தங்கிட
இறையருள் செய்திடு !
இணையில்லா வாழ்வுகொடு
என வேண்டுகிறோம் !