சென்னை:

ன்று வேளாங்கன்னி மாதா கோவில்களில் கொடியேற்றம் நடைபெறுவதால், அதைக் காண  ஏராளமான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். காவல்துறையினர் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டு உள்ளது.

நாகை வேளாங்கன்னி மாதா

உலகப் புகழ்பெற்ற நாகை மாவட்டம் வேளாங்கன்னி மாதா கோயிலில்  இன்று ஆண்டு திருவிழாக்கான கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. மாலை ஆறரை மணிக்கு தஞ்சை மறைமாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில், மாதா உருவம் பொறித்த பேராலாய கொடியை ஏற்றி வைக்கிறார்.

இதைக்காண உலகம் முழுவதும் இருந்து கிறிஸ்தவர்கள் வேளாங்கன்னியில் குவிந்து வருகின்றனர். இந்தியாவில் குறிப்பாக ரோமன் கத்தோலிக்கர்கள் அதிகம் வசிக்கும்,  மும்பை, கோவா, கர்நாடகா, ஆந்திரா, தமிழகம்  முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான  பக்தர்கள் வேளாங்கன்னியில்  குவிந்துள்ளனர்.  மேலும் ஆயிரக்கணக்கானோர் பாத யாத்திரையாக வேளாங்கன்னியை நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர். இதன் காரணமாக பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு உள்ளது.  திருவிழாவையொட்டி அங்கு 2500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை பெசன்ட்நகர் மாதா கோவில்

சென்னையில் பெசன்ட் நகரில் உள்ள பிரச்சித்திப் பெற்ற வேளாங்கன்னி கோவிலும் இன்று மாலை  கொடியேற்றப்படுகிறது. இதைக்காண சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஆர்சி கிறிஸ்தவர்கள், காவி உடை அணிந்து நடை பயணமாக பெசன்ட் நகர் நோக்கி  திரண்டு வருகின்றனர். இதன் காரணமாக அடையாறு பகுதிகளில் போக்குவரத்த நெரிசல் காணப்படுகிறது. வேளாங்கன்னி திருவிழாவையொட்டி ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

வேளாங்கன்னி  மாதாத் திருவிழாவின்  முக்கிய நிகழ்ச்சியான தேர் பவனி, செப்டம்பர் 7ம் தேதி நடைபெறுகிறது.