சென்னை:
மாஸ்டருக்கே முன்னுரிமை அளிக்கப்படும் என்று தியேட்டர் உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமனியம் தெரிவித்துள்ளார்.

தமிழக திரையரங்குகளில் கொரோனா பொது முடக்க தளர்வுகளின்படி 50 சதவிகித மக்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில், அந்த அளவை 100 சதவிகிதமாக அதிகரிக்க வேண்டுமென தயாரிப்பாளர்கள் சங்கம் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தது. இந்த கோரிக்கையை ஏற்ற தமிழக அரசு 100 சதவிகிதமாக அதிகரிக்க அனுமதி வழங்கியது.

தமிழக அரசின் இந்த உத்தரவை ரத்து செய்ய கோரி முத்துகுமார், ராம்குமார் ஆதித்தன் ஆகியோர் தமிழக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு அளித்திருந்தனர். அந்த மனுவில், தமிழக அரசின் உத்தரவு, மத்திய அரசின் கொரோனா பேரிடர் விதிகளுக்கு எதிரானது என்று குறிப்பிட்டு இருந்தனர்.

இந்த மனுவை விசாரணைக்கு ஏற்பதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், உயர் நீதிமன்றம் தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்தால், மாஸ்டருக்கே முன்னுரிமை அளிக்கப்படும் என்று தியேட்டர் உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமனியம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மேலும் பேசிய அவர், தமிழகத்தில் திரையரங்குகளில் 100 சதவிகித ரசிகர்களை அனுமதி என்ற உத்தரவை அரசு திரும்ப பெற்றால் மாஸ்டர் படத்திற்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்பட்டு, அந்த திரைப்படம் மட்டுமே வெளியிடப்படும் என்று கூறியுள்ளார்.