சேலம்: சேலம் அரசு மருத்துவமனையில் 250 ரூபாய் மட்டுமே செலுத்தி முழு உடல் பரிசோதனை செய்து கொள்ளும் திட்டம் விரைவில் செயல் படுத்தப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் கார்மேகம் கூறியுள்ளார்.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, 1.3.2016 அன்று ஏழை மக்களின் பாதுகாப்புக்காக துவக்கி வைத்த ‘அம்மா முழு உடல் பரிசோதனை திட்டம்’ மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்த திட்டம் முதன்முதலாக ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் தொடங்கப்பட்டது. பின்னர் படிப்படியாக சென்னை மட்டுமின்றி மாநிலம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் விரிவு படுத்தப்பட்டு வந்தது.
இந்த திட்டம் விரைவில் சேலம் அரசு பொதுமருத்துவமனையில் தொடங்கப்பட உள்ளதாக ஆட்சியர் அறிவித்து உள்ளார். இந்த முழு உடல் பரிசோதனைக்கு கட்டணம் ரூ.250 மட்டுமே. இந்த திட்டம் எண்ணற்ற ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. இந்த திட்டத்தின் நோக்கம் பொது மக்கள் குறைந்த கட்டணத்தில் உடல் பரிசோதனைகளை முழுமையாக ஒரே இடத்தில் பெறச்செய்வதாகும்.
தனியார் மருத்துவமனைகளில் முழு உடல் பரிசோதனைக்கு ரூ.10ஆயிரம் வரை வசூலிக்கப்படும் நிலையில், அரசு மருத்துவமனையில் ரூ.250 மட்டுமே வசூலிக்கப்பட்டு, 18 வகை மருத்துவ பரிசோதனைகள் செய்யப்படுகின்றன.
இந்த திட்டத்தில் முழு ரத்த பரிசோதனை, சிறுநீரக பரிசோதனை, சக்கரை நோய்க்கான ரத்த பரிசோதனை (சாப்பிடுவதற்கு முன்பும், சாப்பிட்ட பின்பும்) சிறு நீரக ரத்த பரிசோதனை, ரத்த கொழுப்பு பரிசோதனை, கல்லீரல் ரத்த பரிசோதனை ஹெப்படைடிஸ் பி ரத்த பரிசோதனை, ரத்த வகை மற்றும் ஆர்.எச். பரிசோதனை, இசிஜி, மார்பு டிஜிட்டல் எக்ஸ்ரே, மிகையொலி பரிசோதனை (ஸ்கேன் அப்டாமன்) கருப்பை முகைப் பரிசோதனை , மின் ஒலி இதய வரைவு (எக்கோ), பி.எஸ்ஏ, தைராய்டு பரிசோதனைகள், ஹெச்பிஏ1சி பரிசோதனைகள், டிஜிட்டல் மார்பக சிறப்பு பரிசோதனை, டெக்ஸா ஸ்கேன், எலும்பு உறுதிதன்மை ஆகிய பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன.