டெல்லி:

காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, ராகுல்காந்தி, பிரியங்காகாந்தி போன்றோருக்கு பிஎஸ்சி எனப்படும் உயர்ரக பாதுகாப்புகளை மோடி அரசு குறைத்து சாதாரண இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கி உள்ளது.

இந்த நிலையில், இன்று திடீரென லோதி எஸ்டேட்டில் உள்ள  பிரியங்கா காந்தியின் வீட்டுக்கள் மர்ம கார் ஒன்று புகுந்தது. இது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து, அங்கிருந்த பாதுகாவலர்கள், அந்த கார மடக்கி, அதில் இருந்தவர்களை விசாரித்தனர். இந்த சம்பவம் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், காங்கிரசார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து காவல்துறையில் புகார் கொடுக்கப்பட்டு உள்ளது.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மகளும், கட்சியின் உத்தரப்பிரதேச பொதுச் செயலாளருமான பிரியங்கா காந்தியின் வீடு டெல்லி லோதி எஸ்டேட்டில் உள்ளது. இங்கு இன்று மர்ம கார் ஒன்று திடீரென புகுந்தது. வீ ட்டுக்குள் புகுந்த கார்  வலப்புறமாக திரும்பியுள்ளது. அதன்பிறகே பாதுகாப்பு காவலர்கள் அந்த காரை மடக்கி விசாரித்ததாக கூறப்படுகிறது.

விசாரணையில் காரில் 5 பேர் இருந்ததாகவும், அவர்கள்  பிரியங்கா காந்தியுடன் புகைப்படம் எடுக்க விரும்பி வந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்,  பாதுகாப்பு குறைபாடு காரணமாகவே இது போன்ற சம்பவங்கள் நடைபெறுகின்றன என்று காங்கிரஸ் தலைவர்கள்  குற்றம் சாட்டி உள்ளனர்.