டெல்லி
இந்திய ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி ஆகியோரின் சம்பளம் இருநூறு பலமடங்கு உயர உள்ளது. இதற்கான ஒப்புதல் வரும் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் பெறப்படும் என தெரிகிறது.
தற்போது, இந்திய ஜனாதிபதிக்கு ரூ.1.50 லட்சமும், துணை ஜனாதிபதி ரூ.1.25 லட்சமும், மாநில கவர்னர் ரூ.1.10 லட்சமும் மாதந்தோறும் சம்பளமாக வழங்கப்பட்டு வருகிறது.
இந்தியாவில் 7-வது சம்பள கமிஷன் பரிந்துரைகள் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஜனாதிபதி, துணை ஜனாதிபதி மற்றும் மாநில கவர்னர்களின் சம்பளத்தையும் உயர்த்திட மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
விரைவில் இந்த பட்டியல் அமைச்சரவையின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று தெரிகிறது. இதையடுத்து, இந்த பட்டியல் நாடாளுமன்றம் ஒப்புதலுக்கு அனுப்பப்படும். நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியவுடன் சம்பள உயர்வு உடடினயாக அமலுக்கு வரும்.
புதிய சம்பளமாக ஜனாதிபதியின் சம்பளம் ரூ.1.50 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சம் வரையில் உயரும். துணை ஜனாதிபதியின் சம்பளம் ரூ.1.25 லட்சத்திலிருந்து ரூ.3.5 லட்சம் வரை உயரும் என கூறப்படுகிறது. இது கிட்டத்தட்ட 200% உயர்வு ஆகும்.
கடைசியாக 2008-ம் ஆண்டு ஜனாதிபதி, துணை ஜனாதிபதி மற்றும் கவர்னர்களின் சம்பளத்தை மத்திய அரசு உயர்த்தியது குறிப்பிடத்தக்கது.