சென்னை: சட்டப்பேரவையில் ஜனநாயக படுகொலை என்று குற்றம் சாட்டியுள்ள எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, நாளை சென்னையில் ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் இருப்பதாக அறிவித்து உள்ளார். அவருடன் அவரது ஆதரவு அதிமுக எம்எல்ஏக்கள் உள்பட அதிமுக தொண்டர்கள் பங்கேற்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த உண்ணாவிரத போராட்டம், நாளை காலை சென்னையில் உள்ள வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
அதிமுகவில் மொத்தமுள்ள 65 எம்எல்ஏக்களில் 61 பேர் எடப்பாடிக்கு ஆதரவாக உள்ளனர். 2 பேர் மட்டுமே ஓபிஎஸ்க்கு ஆதரவாக இருக்கின்றனர். இந்த நிலையில், அதிமுக பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப் பட்டுள்ள எடப்பாடி பழனிச்சாமி, ஓபிஎஸ்ஐ சட்டமன்ற துணைத்தலைவர் பதவியில் இருந்து நீக்கி, ஆர்.பி.உதயகுமாரை நியமித்து, அது தொடர்பாக சபாநாயகருக்கு கடிதம் எழுதியிருந்தார். ஆனால், சபாநாயகர் அந்த கடிதம் குறித்து எந்தவித முடிவும் எடுக்கவில்லை.
இந்த நிலையில், இன்று சட்டப்பேரவை கூடியதும், எடப்பாடி பழனிச்சாமி, தனது கடிதம் குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு சபாநாயகர் அனுமதி மறுக்க அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர். சபையில் அமர்ந்து தர்ணா செய்தனர். இதையடுத்து, அவர்களை வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டதுடன், இன்று ஒரு நாள் சபை நிகழ்வுகளில் பங்கேற்க தடை விதித்தார்.
இதைத்தொடர்ந்து சபை வளாகத்தில் தர்ணா நடத்திய எடப்பாடி பழனிச்சாமி, சபாநாயகரை கடுமையாக விமர்சித்தார். தொடர்ந்து, தங்களது எதிப்பை காட்ட, நாளை உண்ணாவிரத போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனர். இது தொடர்பாக காவல்துறையினரிடமும் அனுமதி கோரி மனு அளித்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து, நாளை வள்ளுவர் கோட்டத்தில், இபிஎஸ் ஆதரவு அதிமுக எம்.எல்.ஏக்கள் ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்துள்ளனர். சட்டப்பேரவையில் நடந்தது ஜனநாயக படுகொலை என கூறி, அதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையிலும், ஆர்.பி.உதயகுமாரை எதிர்க்கட்சி துணை தலைவராக நியமிக்க வேண்டும் என கூறியும் இந்த உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்துள்ளனர்.
சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை எடப்பாடி பழனிசாமி தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சி துணை தலைவர் விவகாரத்தில் சபாநாயகரின் நடவடிக்கையை கண்டித்து உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.