சென்னை,
தமிழக சட்டமன்ற கூட்டம் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது. ஆளுநர் உரையை திமுக, காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் புறக்கணித்து வெளிநடப்பில் ஈடுபட்டன.
அதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் உரை மஸ்கோத் அல்வா மாதிரி உள்ளது என்று கூறினார்.
மேலும், ஆளுநர் உரையில் தமிழக அரசின் வருவாய் குறைந்துள்ளதை ஒத்துக்கொண்டுள்ளனர். இந்த நிலையில், அறிவித்துள்ள திட்டங்களை எப்படி நிறைவேற்றப்போகிறார்கள் என்று கேள்வி எழுப்பினார். இது கேலிக்குரியதாகவும், கேள்விக்குரியதாகவும் உள்ளது என்றார்.
சட்டியில் இருந்தால் தான் அகப்பையில் வரும் என்பார்கள். திட்டங்களை நிறைவேற்ற நிதியை எப்படி கொண்டு வரப்போகிறார்கள் என்பது தெரியவில்லை என்ற அவர், எதாவது மந்திரக்கோல் வைத்துள்ளார்களா? என்பதும் தெரியவில்லை என்றார்.
மேலும், தமிழக அரசுக்கு உள்ள கடன் சுமை பற்றி ஆளுநர் உரையில் ஒரு வரிகூட குறிப்பிடப்படவில்லை என்றும, தமிழகத்தில் தொழில் வளர்ச்சி பின்னோக்கி போய்க் கொண்டிருக்கிறது. அதை எப்படி சரி செய்யப் போகிறோம் அந்த விளக்கமும் இல்லை. வேலை இல்லா திண்டாட்டத்தை போக்கும் முயற்சியில் எப்படி ஈடுபடப் போகிறோம் என்பது பற்றியும் குறிப்பிடப்படவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.
விவசாயிகள் வைத்திருக்கக்கூடிய கோரிக்கைகள் எப்படி நிறைவேற்ற போகிறது என்பது குறித்து ஆளுநர் உரையில் ஏதும் இல்லை.. இது வேதனைக்குரியதாக இருப்பதாகவும், ஜிஎஸ்டி வரிக்கு ஒரு பெரிய பாராட்டு பத்திரமே கொடுக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.
பொதுவாக ஆளுநர் உரை என்பது, மாநில அரசு தயாரித்துக் கொடுக்கும் உரையைத்தான் படிப்பார்கள், அதுதான் மரபு. ஆனால் இன்று ஆளுநரை உரை படித்தது, மத்திய அரசு தயாரித்து கொடுத்துள்ள உரையைத்தான் ஆளுநர் படித்தாரோ என்ற சந்தேகம் தனக்கு வந்துள்ளது என்ற ஸ்டாலின், நான் முன்பே சொன்னது போல் ஆளுநர் உரை மஸ்கோத் அல்வாவாக அமைந்துள்ளது என்றார்.