டெல்லி: டோக்கியோ ஒலிம்பிக் போட்டி தொடக்க விழாவன்று நடைபெற உள்ள அணிவகுப்பில் இந்தியா சார்பாக குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம், ஹாக்கி அணி கேப்டன் மன்பிரீத் சிங் ஆகியோர் இந்திய தேசிய கொடியை ஏந்தி செல்கின்றனர். முதன்முறையாக இரண்டு வீரர்கள், இந்த ஆண்டு தேசிய கொடியை ஏந்தி செல்கின்றனர்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில், ஒலிம்பிக் போட்டி ஜூலை 23 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 8 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. அதற்கான வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு, ஜம்பான் புறப்பட தயாராகி உள்ளனர். இந்த நிலையில், ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்ளும் வீரர்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றனர்.
ஒலிம்பிக் போட்டி தொடக்க விழாவின்போது, போட்டியில் கலந்துகொள்ளும் அனைத்து நாடுகளும், தங்களது நாட்டு தேசிய கொடியுடன் அணிவகுத்து வருவது வழக்கமான நடைமுறை. அதன்படி, இந்தியா சார்பில், குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம், ஹாக்கி அணி கேப்டன் மன்பிரீத் சிங் தேசிய கொடியை ஏந்திச் செல்வார்கள் என இந்திய ஒலிம்பிக் சங்கம் தெரிவித்துள்ளது.
முதன்முறையாக பாலின சமத்துவத்தை உறுதி செய்வதற்காக ஒரு ஆண், ஒரு பெண் என இரண்டு பேர் தேசியக்கொடியை ஏந்தி செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
கடந்த 2016 ஆம் ஆண்டு பிரேசிலி ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டி துவக்க விழாவில் இந்தியா சார்பில் அபினவ் பிந்தரா தேசிய கொடி ஏந்திச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாரா ஒலிம்பிக்கில் இந்திய கொடி ஏந்திச்செல்கிறார் தமிழக வீரர் ‘தங்கமகன்’ மாரியப்பன்!