சென்னை: திமுகவுடனான தொகுதி உடன்பாட்டில் அதிருப்தி ஏற்பட்டுள்ள நிலையில், இன்று  மதியம் 1 மணிக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் அவசர செயற்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு குறுகிய காலமே உள்ளதால், தொகுதிப்பங்கீடுகளை முடித்து, கூட்டணியை உறுதி செய்து, பிரசாரத்துக்கு செல்ல அரசியல் கட்சிகள் தீவிரமாக பணியாற்றி வருகின்றன. திமுக கூட்டணியில், கட்சிகளுக்கு இடையே தொகுதிப்பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. நேற்று (1ந்தேதி) இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகளும், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது.

அதையடுத்து, இன்று காலை  கம்யூனிஸ்டு கட்சிகளுடன் தொகுதிப்பங்கீடு குறித்து பேச்சுவார்ததை நடைபெற்றது.  இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அமைக்கப் பட்டுள்ள, எம்.பி. சுப்பராயன் தலைமையிலான 3 பேர் அடங்கிய தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக் குழுவினர்,  தொகுதிப் பங்கீடு குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது,  மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 10 தொகுதிகள் கேட்டதாகவும், தி.மு.க 7 தொகுதிகள் மட்டும் வழங்க ஒப்புக்கொண்டதாகவும் தெரிகிறது. இதனால், இறுதி முடிவு எட்டப்படவில்லை.  அதிருப்தியுடன் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிள் வெளியேறினர். இதையடுத்து,  மீண்டும் நாளை பேச்சுவார்த்தை நடத்தவிருக்கிறோம். நல்ல முடிவு மேற்கொள்ள வாய்ப்பிருக்கிறது என சுப்பராயன் கூறினார்.

இந்த நிலையில்,  சென்னையில் மதியம் 1 மணிக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் அவசர செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் எடுக்கப்படும் முடிவைத் தொடர்ந்தே அடுத்தக்கட்ட நகர்வுகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து, தி.மு.கவுடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் பேச்சுவார்த்தைக்கு வந்தனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைச் செயலாளர் வீரபாண்டியன், நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன், தேசிய செயற்குழு உறுப்பினர் பழனிசாமி உள்ளிட்டோர் அண்ணா அறிவாலயம் வருகைதந்துள்ளனர்