சென்னை,

மிழக அரசு, அடக்கு முறையை கைவிட்டு, அரசு ஊழயர் சங்கங்களுடன் பேச்சு வார்த்தை நடத்த முன்வர வேண்டும் என  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது.

இன்று சென்னை மெரினா கடற்கரையில் அரசு ஊழியர்கள் சங்கத்தினரின் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. சுமார் 10ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட அந்த பேரணியை தடுத்து நிறுத்தி நிர்வாகிகளை போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் விடுத்துள்ள அறிக்கையில்  அடக்குமுறையை கைவிட்டு ஜாக்டோ – ஜியோ தலைவர்களோடு அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளது.

இதுகுறித்து  அறிக்கையில் கூறியிருப்பதாவது,

புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தை 1.4.2003க்கு பிறகு வேலைக்குச் சேர்ந்த அரசு ஊழியர் – ஆசிரியர்களுக்கு அமலாக்கிட வேண்டி வலியுறுத்தியும், மாநில அரசின் எட்டாவது ஊதியக் குழுவினை அமல்படுத்துவதற்கு முன்னர் ஊதிய முரண்பாடுகளைக் களைந்து அமல்படுத்திட வலியுறுத்தியும், ஊதியக்குழு முடிவுகளை அமலாக்குவதற்கு முன்பு இடைக்கால நிவாரணம் அறிவித்திட வேண்டுமென்றும், சிறப்பு காலமுறை ஊதியம், தொகுப்பூதியம், மதிப்பூதியம் ஆகியவற்றை ஒழித்து வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியத்தினை வழங்கிட வேண்டுமென வலியுறுத்தியும் ஜாக்டோ – ஜியோ (ஆசிரியர்கள் – அரசு ஊழியர்கள் கூட்டமைப்பு) போராடி வருகிறது.

நியாயமான இந்த போராட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு ஆதரிக்கிறது.

போராடும் ஆசிரியர் – அரசுஊழியர் கூட்டமைப்பு நிர்வாகிகளோடு பேச்சுவார்த்தை நடத்துவதற்கு பதிலாக, சென்னையில் நடைபெறவுள்ள பேரணிக்கு வருபவர்களை இரவோடு இரவாக வழிமறித்து கைது செய்துள்ளதையும், சென்னைக்கு வர முடியாமல் காவல்துறை தடுத்திருப்பதையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.

ஜாக்டோ – ஜியோ நிர்வாகிகளோடு உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி அவர்களது கோரிக்கைகளை பரிசீலிக்க வேண்டுமென மாநில அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.