சென்னை:

பிரபல லாட்டரி அதிபர் மார்ட்டின் வீட்டில் நடைபெற்ற வருமான வரி சோதனை நடைபெற்று வந்த நிலையில்,   அவரது நிறுவன கேஷியர் பழனிச்சாமி மர்மமான முறையில் மரணம் அடைந்தார்.

இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்த நிலையில், கேஷியர் பழனிச்சாமி, தற்கொலை செய்துகொள்ளவில்லை, அவர் கொலை செய்யப்பட்டு, குட்டையில் வீசப்பட்டுள்ளார் என்று பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிய வந்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

லாட்டரி அதிபர் மார்ட்டின் வீடு, அலுவலகங்களில் ஏப்ரல் 30-ம் தேதி வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். 5 நாட்கள் நடைபெற்ற சோதனையில் கோடிக்கணக்கான பணம், நகைகள் மற்றும் ஆவணங்கள்  கைப்பற்றப்பட்டன. மேலும் அவரது மனைவி நடத்திவரும் ஹோமியோபதி கல்லூரியிலும் விசாரணை நடைபெற்றது.

அதைத்தொடர்ந்து, அந்தக் கல்லூரியின் கேஷியர் பழனிச்சாமியை வருமான வரித்துறையினர் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். இதில், அவர் பல உண்மைகளை உளறியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த மே மாதம் 3ம் தேதி பழனிச்சாமி உடல் காரமடை எல்லைக்குட்பட்ட வெள்ளியங்காடு அருகேயுள்ள குட்டையில்  சடலமாக கிடந்தது. அவரது உடலில் பல காயங்கள் இருந்தன. இதன் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டு குட்டையில் வீசப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்தது.

ஆனால், காவல்துறையினர் அவரது மரணம் தற்கொலையாக இருக்கலாம் என்று கூறி வந்தனர். இதற்கிடையில் செய்தியாளர்களிடம் பேசிய பழனிச்சாமியின் மனைவி, தனது கணவர் மரணம் தொடர்பாக, காவல்துறையினர்  தங்களிடம்  பண பேரம் பேச்சு நடத்தியதாக குற்றம் சாட்டினார்.

இந்த நிலையில், தற்போது பழனிச்சாமியின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகி உள்ளது. அதில்,  பழனிசாமி அடித்து கொலை செய்யப்பட்டே குட்டையில் விசப்பட்டுள்ளார். அவரது மரணம் கொலை தான், தற்கொலை அல்ல என்று மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.