திருமண ஜோடிகளை ஏங்கவிடும் கொரோனா…
வரும் ஜூலை 4-ம் தேதியுடன் தளர்வு நீங்கி ஊரடங்கு விலக்கிக்கொள்ளப்பட்டவுடன் தங்கள் திருமணத்தைச் செய்து கொள்ளலாம் என்று இங்கிலாந்தில் எதிர்பார்ப்புடன் காத்திருந்த பல ஜோடிகள் மீண்டும் வரும் செப்டம்பர் வரை காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
கடந்த வாரம் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், திருமண நிகழ்வுகளை அதிகபட்சமாக 30 நபர்களுடன் தங்களின் வழிபாட்டுத் தலங்களில் பெருமளவிலான ஆராதனைகளைத் தவிர்த்து நடத்திக் கொள்ளலாம் என்று அனுமதி அளித்திருந்தார்
ஆனால் தற்போதுள்ள சூழ்நிலையில் சமூக இடைவெளியினை தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டி உள்ளதால் இத் திருமண நிகழ்வுக்காகக் காத்திருந்த ஜோடிகள் அனைவரும் வரும் இலையுதிர் காலம் வரை காத்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
போரிஸ் ஜான்சன் அறிவிப்பைத் தொடர்ந்து மிகவும் மகிழ்ச்சியுடன் திருமணத்தை எதிர்நோக்கியிருந்த ஜோடிகள் வரும் செப்டம்பர் வரை திருமணம் முடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இத்திருமண நிகழ்வுகளைப் பதிவு செய்யும் அந்நாட்டின் கவுன்சில் அதிகாரிகள் கூறும் பொழுது பெரும்பாலான ஜோடிகள் தங்கள் திருமணத்தை 2021 ஆம் ஆண்டுக்கு ஒத்தி வைத்துவிட்டதாகத் தெரிவிக்கின்றனர்
மேலும் கவுன்சில் அதிகாரிகள் கூறுகையில் திருமண நிகழ்வுகளின் தாமதத்திற்கு அரசு வெளியிடப்போகும் நெறிமுறைகளுக்காகக் காத்திருப்பதும் ஒரு காரணமாகும் என்று தெரிவிக்கின்றன.
டான்காஸ்டரைச் சேர்ந்த ஹென்னா ரேடியோப் கூறுகையில், “ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பொழுது எப்படியும் எங்களது திட்டப்படி ஜூலை 17-ல் திருமணம் செய்து விடுவோம் என்று எதிர்பார்த்திருந்தோம். ஆனால் கடந்த மாதம் தான் இது அவ்வளவு எளிதான விசயம் இல்லை என்பதைப் புரிந்துகொண்டோம். ஏற்கனவே திட்டமிட்டபடி 92 பேர் வரை திருமண நிகழ்வில் கலந்து கொள்வதாக இருந்தது. ஆனால் தற்போதைய சூழலில் வெறும் 10 நாட்கள் மறு ஏற்பாடுகளைச் செய்வதற்கு போதுமானதாக இருக்காது என்று உணர்ந்து உள்ளதாகக் கூறுகிறார்.
எது எப்படியோ சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள் தற்போது கொரோனாவின் அனுமதிக்காகக் காத்திருக்கின்றன.
– லட்சுமி பிரியா