சாப்பாட்டு பந்தியில் மாட்டு இறைச்சி இல்லை!! உ.பி.யில் திருமணம் நிறுத்தம்!!

லக்னோ:

மாட்டு இறைச்சிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இது தற்போது அரசியல்வாதிகள், கட்சி தலைவர்கள் மத்தியில் மிகப் பெரிய விஷயமாக பேசப்பட்டு வருகிறது.

பல இடங்களில் மாட்டு இறைச்சி தடைக்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்பட்டு, மாட்டு இறைச்சி உணவு திருவிழாவும் நடந்து வருகிறது. மாட்டு இறைச்சி பிரச்னை காரணமாக தற்போது உ.பி.யில் நடக்க இருந்த ஒரு திருமணம் நிறுத்தப்பட்டுள்ளது.

உ.பி.மாநிலம் ராம்பூர் மாவட்டம் போத் காவல் நிலைய எல்லையில் தரியாகார் என்ற கிராமம் உள்ளது. இ ந்த கிராமத்தில் நடக்க இருந்த திருமணத்தின் விருந்தில் மாட்டு இறைச்சி உணவு பரிமாற வேண்டும் என்று மணமகன் குடும்பத்தினர் கேட்டுக் கொண்டனர். இதற்கு மறுப்பு தெரிவித்த மணமகள் குடும்பத்தினர் திருமணத்தையே நிறுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாட்டு இறைச்சிக்காக ஒரு திருமணம் நிறுத்தப்பட்டதை எண்ணி பலரும் வருத்தப்பட்டனர்.முன்னதாக எங்களது விருந்தினர்களுக்கு மாட்டு இறைச்சியை விருந்தில் வைக்க வேண்டும். அல்லது திருமணத்தை நிறுத்த வேண்டும் என்று மணமகன் குடும்பத்தினர் கண்டிப்பாக கூறியதை தொடர்ந்தே திருமணம் நிறுத்தப்பட்டுள்ளது.

மாட்டு இறைச்சி கோரிக்கை மட்டுமின்றி மணமகனுக்கு கார் வாங்கி தர வேண்டும் என்ற வரதட்சனை கோரிக்கையும் மணமகள் குடும்பத்தாரால் நிராகரிக்கப்பட்டுள்ள தகவலும் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக மணமகள் குடும்பத்தினர் மணமகன் குடும்பத்தார் மீது போலீசில் புகார் செய்துள்ளனர்.
இதையடுத்து மணமகன் வீட்டார் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல்நிலைய அதிகாரி பட்வாய் தெரிவித்தார்.


English Summary
Marriage in UP cancelled over beef dish: Obsession with the cow just unlocked a new level