தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மருத்துவமனை சிகிச்சை தொடர்பான எந்த புகைப்படத்தையும், வெளியிடாமல் இருப்பதற்கான மர்மம் என்ன என்று திமுக தலைவர் கருணாநிதி கேள்வியெழுப்பி இருந்தார்.
இதற்கு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், புகைப்படம் வெளியிட வேண்டிய அவசியமில்லை என்று கருத்து தெரிவித்திருந்தார். அதேபோல், அதிமுகவின் பண்ருட்டி ராமசந்திரனும் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து கேட்க கருணாநிதிக்கு உரிமை இல்லை என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதியும், பிரஸ் கவுன்சில் தலைவருமான மார்கண்டேய கட்ஜு, கருணாநிதியை கடுமையாக சாடியுள்ளார்.
“என்ன மாதிரியான மனிதர் இந்த கருணாநிதி…? அவருக்கு அடிப்படை நாகரீகம் தெரியாதா…? மருத்துவமனையில் சிகிச்சை பெறும் ஜெயலலிதாவின் புகைப்படத்தை அவர் கேட்டிருக்கிறார்.
மருத்துவமனையில் சிகிச்சை பெறும் ஒரு பெண்ணின் புகைப்படத்தை கேட்டிருப்பது மனிதாபிமானமற்ற முறை அல்லவா? இது வெட்கப்படக் கூடிய கீழ்த்தரமான செயல். இது மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. இது மிகவும் ஆட்சேபனைக்குரியதாகும். கருணாநிதிக்கு நாகரீகம் இல்லை என்பதையும், இழிவான நடத்தை உள்ளவர் என்பதையுமே இது வெளிப்படுத்துகிறது.
முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு உண்மையில் உடல் நிலை சரியில்லைதான்… அவருடைய புகைப்படங்களைக் கேட்பதை நிறுத்தி விட்டு, அவர் விரைவில் நலம் அடைய மட்டுமே கருணாநிதி கேட்டுக் கொண்டிருக்க வேண்டும். அரசியல், காரணங்களுக்காக இவர் எந்த நிலைக்கு வேண்டுமானலும் இறங்குவார் என்பதை இது காட்டுகிறது” என்று கருணாநிதியை மிகக் கடுமையாக விமர்சித்திருக்கிறார் கட்ஜூ.
ஏற்கனவே ஒரு முறை சொத்து வழக்கில் ஜெயலலிதா பெங்களூரு சிறையில் இருக்கும்போது, கருத்து கூறிய கருணாநிதிக்கு இதே பாணியில் கட்ஜூ கண்டனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.