அகமதாபாத்
இந்திய ஆன்மீக குருவை சந்தித்த பின் தான் முகநூலை மார்க் ஸுபர்பெர்க் அறிமுகப்படுத்தியதாக மத்திய ரெயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
அகமதாபாத் நகரில் சாமிநாரயண் பிரிவினர் கடந்த ஞாயிறு அன்று ‘ஆத்மிய யுவ மகோத்சவம்’ என்னும் நிகழ்வை நிகழ்த்தினர். சாமி நாராயண் மடத்தின் துறவி ஹரிபிரசாத் சாமிஜியின் 84 ஆம் பிறந்த நாளையொட்டி மதம் மற்றும் சமூக நல்லிணக்கத்துக்காக இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த நிகழ்வில் மத்திய ரெயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் கலந்துக் கொண்டு உரையாற்றினார்.
கோயல் தனது உரையில், “ஆப்பிள் நிறுவனத்தை நிறுவிய ஸ்டீவ் ஜாப்ஸ் மற்றும் முகநூலை நிறுவிய மார்க் ஸூபர்பெர்க் இருவரும் தங்களது வாழ்க்கையை இந்திய ஆன்மீக தலைவர்களின் அறிவிரைப்படி ஆரம்பித்துள்ளனர். மார்க் ஸூபர்பெர்க் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தனது கல்வியை முடிக்க வில்லை. ஆனால் அவர் இந்தியாவில் உள்ள நீம் கரோலி பாபா என்னும் சன்யாசியை சந்தித்த பின் இந்த உலகை புதிய கோணத்தில் பார்க்க கற்றுக் கொண்டார். அதன் பிறகே அவர் முகநூல் என்னும் பிரம்மாண்ட சமூக தளத்தை உலகுக்கு அறிமுகம் செய்தார்.
ஆன்மீகம் என்பது இவ்வுலகுக்கு மிகப் பெரிய இன்றியமையாத ஒன்றாகும். அத்தகைய ஆன்மீக நிகழ்வில் ஒன்றான இந்த மகோத்சவத்தில் கலந்துக் கொண்டதற்கு நான் பெருமை அடைகிறேன். இந்தியாவில் பக்தி நிறைந்த மாநிலங்களில் ஒன்றான குஜராத் மாநிலத்தில் இந்த தகவலை அளிப்பதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இந்த நாட்டை ஒருங்கிணைப்பதிலும் சகோதரத்துவத்தில் இந்தியா ஒரு முன் மாதிரி என்பதை உலகுக்கு எடுத்துக்காட்டுவதிலும் ஆன்மிகம் மட்டுமே உள்ளது” எனக் கூறி உள்ளார்.