சென்னை: மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டு வரும் நினைவாலயம், பிப்ரவரியில் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது நினைவிடப்பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதால், ஜனவரி முதல் வாரம் அரசிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழக சட்டமன்ற தேர்தல் 2021 மே மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக ஜெயலலிதாவின் மெரினா நினைவிடம், அவரது போயஸ் தோட்ட நினைவில்லம் போன்றவற்றை திறந்துவிட தமிழகஅரசு தீவிரமாக பணியாற்றி வருகிறது.
போயஸ்கார்டனில் உள்ள நினைவில்லாம், அரசுடமையாக்கப்பட்டுள்ள நிலையில், நினைவில்லமாக்க மாற்றும் பணிகள் துரிதகதியில் நடைபெற்று வருகின்றன. அதுபோல, மெரினா கடற்கரையில் அவருக்கு கட்டப்பட்டு வரும் பீனிக்ஸ் பறவை வடிவிலான நினைவிடம் கட்டுமானப்பணிகளும் 90 சதவிகிதம் நிறைவடைந்து விட்டன. அத்துடன் அருங்காட்சியம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் அனைத்தும் ஜனவரிக்குள் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையடுத்து, ஜனவரி முதல் அல்லது 2வது வாரத்தில், நினைவில்லம், நினைவிடம் போன்றவை அரசிடம் ஒப்படைக்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து கூறிய அதிகாரிகள், ஜெயலலிதா நினைவிடம் மற்றும் அதனை சார்ந்த கட்டமைப்புகள் 50 ஆயிரத்து 422 சதுர அடி பரப்பளவில் ரூ.57.8 கோடி மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது. இந்த நினைவிடத்தில் பீனிக்ஸ் பறவை வடிவமைப்பில் நினைவிடம், அறிவுத்திறன் பூங்கா, கருங்கல்லால் ஆன நடைபாதை, புல்வெளி மற்றும் நீர்தடாகங்கள், சுற்றுச்சுவர் போன்றவை 9 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டு உள்ளன.
இந்தப்பகுதி முழுவதும் ஆந்திராவில் இருந்து கொண்டுவரப்பட்ட அலங்கார பூச்செடிகளால் தோட்டம் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. அத்துடன் நினைவிட வளாகத்தில் ரூ.12 கோடி மதிப்பில் அருங்காட்சியகம் கட்டும் பணி நிறைவடைந்து உள்ளது. இதில், மறைந்த ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு, சாதனைகள், மக்களுக்கு செய்த பணிகள் உள்ளிட்டவை டிஜிட்டல் முறையில் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. அடுத்த ஒரு வாரத்தில் இந்தப்பணிகள் நிறைவடையும் அதன்பிறகு, அவை, அரசிடம் ஒப்படைக்கப்பட்டு, பொதுமக்களின் பார்வைக்கு திறந்து வைக்கப்படும்.
பிப்ரவரியில் ஜெயலலிதாவின் பிறந்தநாள் வர இருப்பதால், அன்றைய தினம் ஜெயலலிதாவின் நினைவிடம் திறந்து வைக்கப்படும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.