சென்னை: மெரினா கடற்கரை, ஸ்மார்ட் வாகன நிறுத்துமிடங்களை புதிய ஒப்பந்ததாரர் நியமனம் செய்யப்படும் வரை இலவசமாக பயன்படுத்தி கொள்ளலாம் என சென்னை மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
சென்னை மாநகராட்சியின் வருவாயை அதிகரிக்கும் பொருட்டு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வாகனங்களை நிறுத்துவதற்கு மெரினா கடற்கரை, பெசன்ட் நகர் கடற்கரை, தியாகராய நகர் உள்ளிட்ட 170-க்கும் மேற்பட்ட இடங்களில் வாகனங்களை நிறுத்துவதற்கு தனியார் நிறுவனத்திடம் ஒப்பந்தம் அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக இரு சக்கர வாகனங்களுக்கு ஒரு மணி நேரத்திற்க்கு ரூ.5-ம், 4 சக்கர வாகனங்களுக்கு ஒரு மணி நேரத்திற்க்கு ரூ.20-ம் கட்டணமாக வசூலிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆனால் ஒப்பந்ததாரர்கள், அரசு அறிவித்ததை விட அதிக அளவில் கட்டண வசூல் நடத்தியதுடன், வாகன உரிமையாளர்களுடன் தகராறுகளிலும் ஈடுபட்டு வந்தனர். குறிப்பாக மெரினா கடற்கரையில் அடாவடியாக வாகன கட்டண வசூல் வசூலிக்கப்பட்டு வந்தது. கொடுக்க மறுக்கும் வாகன உரிமையாளர்கள் ரவுடிகள் மூலம் மிரட்டப்பட்டனர். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக ஏராளமான புகார்கள் எழுந்தன.
இதைத்தொடர்ந்து, சென்னை மாநகராட்சி மற்றும் காவல்துறையினர், அதிக கட்டண வசூலை தடுக்கும் வகையில் வாகனங்கள் நிறுத்த செயல்பாடுகளை பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் ஸ்மார்ட் வாகனநிறுத்தம் செயல்படும் பகுதியில் 25மீட்டர் இடைவெளியில் அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் எனவும் அறிவித்தனர். ஆனால், அதை ஒப்பந்த நிறுவனங்கள் ஏற்க மறுத்து வந்தன. இதனால் பிரச்சினைகளும் ஓயவில்லை. வாகன ஓட்டிகளிடம் ரூ.300 வரை பார்க்கிங் கட்டணம் வசூலித்ததாக காவல்துறை வழக்கு வரை சென்றதாகவும் புகார் வந்தது. இதனை அடுத்து ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் பார்க்கிங் ஒப்பந்தத்தை ரத்து செய்தது செல்லும் என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
இந்த நிலையில், மெரினா கடற்கரை, ஸ்மார்ட் வாகன நிறுத்துமிடங்களில், வாகன நிறுத்தம் செய்ய கட்டண வசூல் செய்வது தொடர்பாக புதிய ஒப்பந்ததாரர் நியமனம் செய்யப்படும் வரை இலவசமாக பயன்படுத்தி கொள்ளலாம் என சென்னை மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதன்படி, சென்னையில் மாநகராட்சியில் உள்ள ஸ்மார்ட் வாகன நிறுத்துமிடங்களை இலவசமாக பயன்படுத்தி கொள்ளலாம் எனவும், ரவுடிகளை வைத்து சிலர் மிரட்டி கட்டணம் கேட்டால் சம்பந்தப்பட்டவர்கள் குறித்து போலீசில் புகார் அளிக்கலாம் என சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.