ஐக்கிய நாடுகள் சபை:

முஸ்லிம் மற்றும் தலித்கள் ஒதுக்கப்படுவதால், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறையும் அபாயம் உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் தலைவர் மைக்கேல் பேச்சலட் எச்சரித்துள்ளார்.


ஜெனீவாவில் நடந்த ஐநா. மனித உரிமைகள் கவுன்சிலின் கூட்டத்தில் அவர் பேசும்போது, ” இந்தியாவில் ஏழ்மை குறைந்துள்ளது. ஆனால், சரிசமமற்ற நிலை ஆபத்தான பிரச்சினையாக உள்ளது. ஒடுக்கப்பட்ட மக்களை ஒதுக்கிவைத்து, குறுகிய அரசியல் நோக்கத்தோடு இந்தியாவில் செயல்படுகின்றனர்.

இத்தகைய போக்கு, தனி நபர்களை மட்டும் பாதிக்காது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியையே பாதிக்கும் என்று அஞ்சுகின்றேன்.
குறிப்பாக முஸ்லிம்கள் உட்பட சிறுபான்மையினர் துன்புறுத்தப்படுவது இந்தியாவில் அதிகரித்திருப்பதாக எங்களுக்கு புகார்கள் வந்துள்ளன.

அதேபோல், தலித்துகளும் மலைவாழ் மக்களும் இந்தியாவில் ஒதுக்கப்பட்டு வருகின்றனர்.
ஜம்மு காஷ்மீரில் தொடர்ந்து பதற்றம் ஏற்படுவதும், எல்லை தாண்டுவதும் உயிரிழப்பையும், மக்களின் இடம் பெயர்வையும் ஏற்படுத்தும்.

ஐநா அலுவலகத்துக்கு வந்து இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தலாம். காஷ்மீர் பிரச்சினை தீரவும், மனித உரிமை மீறல் பிரச்சினை தீரவும்  நாங்கள் உதவியாக இருப்போம்.