தமிழகம், புதுச்சேரி, கேரளா, அஸ்ஸாம், மேற்கு வங்கம் ஆகிய 5 மாநில சட்டமன்ற தேர்தல் தொடர்பாக கடந்த பிப்ரவரி 26ந்தேதி மாலை தேர்தல்செய்தியாளர்களை சந்தித்த இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா 5 மாநில தேர்தல் அட்டவணையை வெளியிட்டார்.
அதன்படி, தமிழகம், புதுச்சேரி, கேரளாவுக்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 6ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அசாமில் 126 தொகுதிகளுக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. அதுபோல மேற்குவங்க மாநிலத்தில் 294 தொகுதிகளுக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. முதல்கட்ட தேர்தல் மார்ச் 27 தொடங்கி ஏப்ரல் 29 வரை நடைபெறும் எனவும் மே 2ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும் எனவும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அஸ்ஸாம் மாநிலத்தில் முதற்கட்டமாக 47 தொகுதிகளுக்கும், மேற்குவங்க மாநிலத்தில் முதல்கட்டமாக 30 தொகுதிகளுக்கும் மார்ச் 27ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
இந்த தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் வேட்பு மனு தாக்கல் மார்ச் 2ம் தேதி தொடங்கி மார்ச் 9ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், நேற்று மாலையுடன் தேர்தல் பிரசாரமும் முடிவடைந்துள்ளது.
நாளை (27ந்தேதி) முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. வாக்குப்பதிவை முன்னிட்டு, இன்று தேர்தல் ஆணையம் சார்பில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்பட வாக்குப்பதிவு தேவையான பொருட்கள் வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கும் பணி நடைபெற்று வருகிறது. வாக்குச்சாவடி அலுவலர்களும், இன்றே வாக்குச்சாவடிக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
வாக்குப்பதிவை முன்னிட்டு, வாக்குச்சாவடி அமைந்துள்ள பகுதிகளில் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாநில காவல்துறையினர் மட்டுமின்றி, துணைராணுவப் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.