சென்னை,
தயாநிதி மாறன் மத்திய அமைச்சராக இருந்தபோது, பிஎஸ்என்எல் இணைப்பை தனது நிறுவனத்துக்கு முறைகேடாக பயன்படுத்தியதாக சிபிஐ வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கு மீண்டும் மீண்டும் புதிய மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு மீண்டும் மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டு இழுத்தடிக்கப்பட்டு வருகிறது.
பிஎஸ்என் முறைகேடு வழக்கு இன்று குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் என்று நீதிபதி கடந்த விசாரணையின் போது அறிவித்திருந்தார்.
அதையடுத்து வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு உள்ளவர்களில் தயாநிதி மாறன் உள்பட 4 பேர் மட்டுமே கோர்ட்டில் ஆஜராகினர்.
கலாநிதி மாறன் உள்பட 3 பேர் விசாரணைக்கு ஆஜராகாமல், வழக்கில் இருந்து தங்களை விடுவிக்க கோரி மனு தாக்கல் செய்துள்ளனர்.
மேலும் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள தயாநிதி மாறனின் செயலாளர் கவுதமன், டெக்னீசியன் ரவி உள்பட இருவரும், தங்களையும் வழக்கில் இருந்து விடுவிக்க கோரி தனித்தனியாக மனு தாக்கல் செய்துள்ளனர்.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, இதுகுறித்து பதில் மனு தாக்கல் செய்ய சிபிஐ-க்கு உத்தரவிட்டு வழக்கை 23ந்தேதிக்கு தள்ளி வைத்தார்.
ஏற்கனவே கடந்த விசாரணையின்போதே குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் என்று நீதிபதி அறிவித்திருந்தார். அப்போதும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஆஜராகாததால் வழக்கு தள்ளி வைக்கப்பட்டது.
தற்போது இன்றைய விசாரணையின்போதும், வழக்கில் இருந்து தங்களை விடுவிக்க வேண்டும் என்று புதிய மனு தாக்கல் செய்து வழக்கின் விசாரணையை மேலும் தள்ளி வைத்துள்ளனர் மாறன் சகோதரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
வழக்கு குறித்த சிறு பார்வை….
கடந்த காங்கிரஸ் தலைமையிலான ஆட்சிக்காலத்தில், மத்திய தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்த தயாநிதி மாறன் இருந்தார். அப்போது, பி.எஸ்.என்.எல் இணைப்பை முறைகேடாக தனது அண்ணனின் சன்டிவி நிறுவனத்துக்கு பயன்படுத்தியதாகவும், இதனால் அரசுக்கு 1.78 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாகவும் சி.பி.ஐ வழக்குத் தொடர்ந்தது.
இந்த வழக்கு, சென்னை சி.பி.ஐ நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. வழக்கின் இன்றைய விசாரணையின்போது, தயாநிதி மாறன் நேரில் ஆஜரானார்.
இதையடுத்து, வழக்கு விசாரணையை அக்டோபர் 3-ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி, அன்றைய தினம் தயாநிதி மாறன் மீது குற்றச்சாட்டு பதிவுசெய்யப்படும் என்று தெரிவித்தார்.
பிஎஸ்என்எல் முறைகேடு வழக்கில், சிபிஐ கோர்ட்டில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 9ந்தேதியே சிபிஐ குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது.
இந்த குற்றப்பத்திரிகையின் நகலை ஜூன் 6ந்தேதி நடைபெற்ற விசாரணையின்போது மாறன் சகோதரர்கள் உள்பட குற்றம் சாட்டப்பட்டவர்கள் 7 பேரிடமும் சுமார் 2500 பக்கம் உள்ள குற்றப்பத்திரிகையின் நகல் வழங்கப்பட்டது.
அதையடுத்து, அவர்கள்மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் என்று எதிர்பார்த்த நிலையில், விசாரணை இழுத்துக்கொண்டே சென்றுகொண்டிருக்கிறது.
குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டுள்ள நிலையில், தற்போது வழக்கில் இருந்து தங்களை விடுவிக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்திருப்பதால் வழக்கு மேலும் சில மாதம் இழுத்தடிக்கப்படும் என தெரிகிறது.
குற்றம் சாட்டப்பட்டவர்கள்மீது எப்போது குற்றசாட்டு பதிவு செய்து, எப்போது விசாரணை நடைபெற்று, எப்போது தீர்ப்பு வழங்கப்படும் என்பது நீதி தேவதைக்கு கூட தெரியாது.