சென்னை: தமிழகத்தின் பல நகரங்களில், பள்ளிகளுக்கு அருகாமையிலேயே புகையிலைப் பொருட்களின் விற்பனை ஜோராக நடைபெறுகிறது என்ற அதிர்ச்சி தகவல் ஒரு ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
அரசின் சிகரெட் மற்றும் இதர புகையிலைப் பொருட்கள் சட்டத்தின்படி, பள்ளிகளிலிருந்து, தோராயமாக 100 மீட்டர் சுற்றளவுக்குள் உள்ள பகுதிக்குள் எத்தகைய புகையிலைப் பொருள் விற்பனையும் நடைபெறக்கூடாது. ஆனால், இதை மீறித்தான் தற்போது பலவும் நிகழ்ந்து கொண்டுள்ளது.
இதுதொடர்பாக கூறப்படுவதாவது; இந்தியாவின் 20 நகரங்களில் இதுதொடர்பான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது, பள்ளிகளிலிருந்து 100 மீட்டர் தொலைவுக்குள் இருந்த 487 கடைகளில் நடத்தப்பட்ட ஆய்வுகளில், 225 கடைகளில் புகையிலைப் பொருட்கள் விற்கப்பட்டது கண்டறியப்பட்டது.
தமிழகத்தில் மட்டும், சென்னை, கோவை மற்றும் புதுக்கோட்டை ஆகிய நகரங்களில், 68 பள்ளிகளின் சுற்றுவட்டங்கள் ஆய்வு செய்யப்பட்டன. அவற்றில், 34 விதிமீறல்கள் கண்டறியப்பட்டன.
சென்னை நகரில் மட்டும் 14 பள்ளிகளின் சுற்றுப்புறங்கள் ஆய்வுசெய்யப்பட்டதில், 10 இடங்களில், புகையிலை, வெளிப்படையாக விற்பனை செய்யப்பட்டதும், பிற இடங்களில் மறைமுகமாக விற்பனை செய்யப்பட்டதும் வெளிச்சத்திற்கு வந்தது.
– மதுரை மாயாண்டி