லக்னோ :
யோகா குரு பாபா ராம்தேவ் விடுத்த வேண்டுகோளை ஏற்று , புகைப்பிடிக்கும் பழக்கத்தை கைவிடுவதாக நாகா துறவிகள் அறிவித்தனர்.
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் என்ற இடத்தில் நடைபெற்று வரும் கும்பமேளா நிகழ்ச்சியில் பங்கேற்ற பாபா ராம்தேவ், யோகா வகுப்பு நடத்தினார்.
அப்போது இந்துக்களின் பாதுகாவலர்கள் என்று கூறிக்கொள்ளும் நாகா துறவிகள் மத்தியில் அவர் பேசினார்.
மனிதர்களாக இந்த மண்ணில் அவதரித்த கடவுள்கள் எல்லாம் எந்தத் தீய பழக்கத்திற்கும் ஆட்படாதவர்களாக இருந்துள்ளனர் . இந்த புகைப்பழக்கம் உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கக்கூடியது.
பொருள் சார்ந்த வாழ்க்கையை உதறித்தள்ளிவிட்டு நீங்களெல்லாம் தியாக வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள்.
எனவே இந்த பழக்கத்தை கை விட்டு விடுங்கள். குரு தட்சணையாக நீங்கள் புகைக்க பயன்படுத்தும் மண் குழாயை எனக்குத் தாருங்கள் என்று கேட்டுக்கொண்டார்.
உடனே அங்கிருந்த ஸ்ரீ மகந்த் ராஜேந்திர தாஸ் மகராஜ் என்ற நாகா துறவி, புகைக்க பயன்படுத்தும் மண் குழாயை ராம்தேவிடம் ஒப்படைத்து. இனி புகைக்க மாட்டேன் என்று உறுதியளித்தார்.
அவரைத் தொடர்ந்து மேலும் சில துறவிகள் புகைக்க மாட்டோம் என்று உறுதி அளித்தனர்.
இதனையடுத்து, துறவிகள் மத்தியில் பேசிய ராம்தேவ், தன் வேண்டுகோளை ஏற்று உடனே புகைப்பழக்கத்தை கைவிடுவதாக துறவிகள் அறிவித்ததை மகிழ்ச்சியுடன் வரவேற்றார்.