புதுடெல்லி: ஒலிம்பிக் போட்டிகள் 2021ம் ஆண்டு திட்டமிட்டப்படி நடக்கும் என்று எதிர்பார்ப்புடன் காத்திருப்பதாக தெரிவித்துள்ளார் இந்திய துப்பாக்கிச் சுடுதல் நட்சத்திரம் மனு பாகர்.
கொரோனா பரவலால் ஒலிம்பிக் போட்டிகள் அடுத்தாண்டு ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், இந்தியாவின் இளம் துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை மனு பாகர் கூறியதாவது, “இந்த ஒத்திவைப்பு என்பது நல்ல முடிவுதான். ஏனெனில், அனைவரின் உடல் நலனும் முக்கியம்.
போட்டிக்கு இன்னும் ஓராண்டு பாக்கியுள்ளதால், பயிற்சியில் ஈடுபடுவதற்கு தராளமான நேரம் கிடைத்துள்ளது. இந்த வாய்ப்பை நன்கு பயன்படுத்தி பதக்கம் வெல்வேன்.
நாம் அனைவருமே தற்போது கடினமான காலக்கட்டத்தைக் கடந்து கொண்டுள்ளோம். எனக்கு எதிர்மறையான எண்ணங்கள் கிடையாது. எதையும் எதிர்கொள்வதற்கு மனோரீதியாக தயாராகவே இருக்கிறேன்.
பயிற்சிக்காக, இந்திய விளையாட்டு ஆணையத்தின் உதவியோடு, புதிய மெஷின் ஒன்றை வாங்கியுள்ளேன். அடுத்த சில மாதங்களுக்கு போட்டிகள் நடத்தப்பட வாய்ப்பில்லை என்பதால், வீட்டிலேயே பயிற்சியில் ஈடுபடவுள்ளேன்” என்றார் அவர்.