சென்னை: ஆகஸ்டு 22ந்தேதியுடன் பணிக்காலம் முடிவடைந்த மனோன்மணீயம் சுந்தரனாா் , அழக்கப்பா பல்கலைக்கழக துணைவேந்தர்களின் பதவி காலம் மேலும் ஓராண்டு நீட்டிப்பு செய்து பல்கலைக்கழக வேந்தரான ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் ஏற்கனவே 8 பல்கலைக்கழகங்கள் துணைவேந்தர் இல்லாமல் இருந்து வருகிறது. ஆளுநருக்கும் திமுக அரசுக்கும் இடையே மோதல் காரணமாக, துணைவேந்தர்கள் நியமனம் செய்யப்படாமல் இருந்து வருகிறது. இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தா்களின் பதவிக் காலம் ஆகஸ்டு 21ந்தேதியுடன் முடிவடைந்த நிலையில், அவர்களின் பதவிக்காலம் மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து ஆளுநா் ஆா்.என்.ரவி உத்தரவிட்டுள்ளதாக ஆளுநா் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.
திருவள்ளுவா் பல்கலைக்கழக துணைவேந்தா் ஆறுமுகத்தின் பதவிக் காலம் வியாழக்கிழமையுடன் (ஆக. 21) நிறைவு பெற்றது. இருப்பினும், இப்பல்கலைக்கழகத்தின் சட்ட விதிகளின்படி, துணைவேந்தருக்கு பதவி நீட்டிப்பு வழங்குவதற்கு இடமளிக்காத நிலையில் உள்ளது. இதனால், இப்போதைய துணைவேந்தருக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்பட வில்லை. பல்கலைக்கழகத்தால் அமைக்கப்படும் குழு, துணைவேந்தா் பொறுப்பைக் கவனிக்கும் என ஆளுநா் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.