டில்லி
உலக புற்றுநோய் தினத்தை ஒட்டி டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் செய்தி அனுப்பி உள்ளார்.
கோவா முதல்வராக பதவி வகிக்கும் 63 வயதான மனோகர் பாரிக்கர் கணையப் புற்று நோயால் அவதிப்பட்டு வருகிறார். அவருக்கு கோவா, டில்லி, மும்பை, நியூயார்க் உள்ளிட்ட இடங்களில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து சிகிச்சையில் உள்ள மனோகர் பாரிக்கர் அவ்வப்போது மூக்கில் டியூப் பொருத்தப் பட்ட நிலையில் வெளி உலகுக்கும் வருகிறார்.
கடந்த வாரம் கோவா மாநில நிதிநிலை அறிக்கையை அளிக்கும் போதும் அவர் மூக்கில் டியூப் பொருத்தப்பட்ட நிலையில் சட்டப்பேரவைக்கு வந்து நிதிநிலை அறிக்கையை அளித்தார். இதற்கு முன்பும் அவர் வந்த ஓரிரு நிகழ்வுகளிலும் மூக்கில் டியூப் பொருத்தப்பட்ட நிலையில் வந்துள்ளார்.
கடந்த வாரம் கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை மூத்த பாஜக தலைவர் அத்வானி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ராணுவ தலைமை அதிகாரி பிபின் ராவத் ஆகியோர் வந்து நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.
இன்று சர்வதேச புற்றுநோய் தினம ஆகும். அதை ஒட்டி மனோகர் பாரிக்கர் தனது டிவிட்டரில், “மனித மனம் எந்த ஒரு நோயையும் எதிர் கொள்ளும்” என செய்தி அனுப்பி உள்ளார். அவருடைய இந்த டிவிட் 1900 பேரால் மறுபதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை இந்த டிவிட்டை 7400க்கு மேற்பட்டோர் விரும்பி உள்ளனர்.