விக்ரமாதித்யா விமானம் தாங்கி போர் கப்பலில் விஷ வாயு கசிவு ஏற்பட்டதால், அதன் போர் திறன் எந்த விதத்திலும் பாதிக்கப்படவில்லை என மத்திய பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர் கூறியுள்ளார்.
உத்தரப்பிரதேசத்தின் காசியாபாத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மனோகர் பாரிக்கர், பிறகு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், “விஷ வாயு தாக்கி இருவர் உயிரிழந்த சம்பவம் வேதனைக்குரியது. ஆனாலும் இந்த விபத்தால் கப்பலின் போர் திறன் எந்த விதத்திலும் பாதிக்கப்படவில்லை. இந்த விபத்து குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.
மேலும் அவர்,” இந்தியா மீது தாக்குதல் நடத்துவது தங்களின் பிறப்புரிமை என பாகிஸ்தான் கருதிக்கொண்டிருக்கிறது. அப்படியொரு முடிவை அந்நாடு எடுத்தால் அதற்கு உரிய பதிலடியை இந்தியா கொடுக்கும்.
ஜம்மு காஷ்மீர் விவகாரத்தை பிரச்னைக்குரிய ஒன்றாக பாகிஸ்தான் கருதுவதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், மும்பையில் பயங்கரவாத தாக்குதலை நடத்தியதற்கான காரணத்தை புரிந்துகொள்ள முடியவில்லை” என்றும் பாரிக்கர் தெரிவித்தார்.