சென்னை:  தமிழ்நாடு அமைச்சராக மனோ தங்கராஜ் மீண்டும் பதவியேற்றார். அவருக்கு தமிழ்நாட்டின் போஸ்ட்மேன் என முதலமைச்சரால் விமர்சிக்கப்பட்ட, ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி பிரமாணம் செய்து வைத்தார். புதிய அமைச்சர் மனோ தங்கராஜுக்கு மீண்டும் பால்வளத்துறையே ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.


தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரைவையில், அமைச்சர்களாக இருந்த செந்தில் பாலாஜி மற்றும் பொன்முடி ஆகியோர் ராஜினாமா செய்தனர். இந்த ராஜினாமாவை ஆளுநர் ரவி ஏற்றுக்கொண்டதையடுத்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பரிந்துரையின்படி அமைச்சரைவை இலாகாக்களில் மாற்றம் செய்து ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.

அதன்படி தமிழ்நாடு அமைச்சரவையில் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் முன்னாள் அமைச்சர்கள் செந்தில் பாலாஜி மற்றும் பொன்முடி ஆகியோரின் துறைகள், மற்ற அமைச்சர்களுக்கு பிரித்து கொடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, செந்தில் பாலாஜியிடம் இருந்த மின்சாரத்துறை,  போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கரிடமும்,  மதுவிலக்கு, ஆயத்தீர்வைத்துறை வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமிக்கு கூடுதலாகவும்,  பொன்முடி வகித்து வந்த  வனத்துறை மற்றும் காதி துறை  ராஜகண்ணப்பனுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதேபோல் பால்வளத்துறை அமைச்சராக இருந்த னோ தங்கராஜுக்கு மீண்டும் அமைச்சர் பொறுப்பு வழங்கப்படுகிறது. அவர் ஏற்கனவே இருந்த பால்வளத்துறையே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புதிய அமைச்சராக மனோ தங்கராஜ் பதவியேற்றார். அவர்களுக்கு பதவிப்பிரமாணத்தை ஆளுநர் ஆர்.என்.ரவி செய்து வைத்தார்.

முன்னதாக, பதவி ஏற்பு நிகழ்ச்சிக்காக  , ராஜ்பவனில் உள்ள பாரதியார் அரங்கு தயார்படுத்தப்பட்டது.  நிகழ்ச்சியில் பங்கேற்க, முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன் உள்ளிட்டோர் மாலை 5.58-க்கு வந்தனர். ஆளுநர் ஆர்.என்.ரவி 6 மணிக்கு வந்தார். அவரை முதல்வர் வரவேற்றார். மனோ தங்கராஜை ஆளுநருக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

இதைத் தொடர்ந்து, ஆளுநரிடம் அனுமதி பெற்ற தலைமைச் செயலர் நா.முருகானந்தம், பதவிப் பிரமாணம், ரகசிய காப்பு உறுதிமொழி ஏற்க வருமாறு மனோ தங்கராஜை அழைத்தார். தொடர்ந்து, அவருக்கு ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். ஆவணத்தில் கையெழுத்திட்ட பிறகு, ஆளுநர், முதல்வருக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் பூங்கொத்து வழங்கி வாழ்த்து பெற்றார்.

அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் இதில் பங்கற்றனர். 6.01 மணிக்கு தொடங்கிய நிகழ்ச்சி 6.07 மணிக்கு முடிவடைந்தது.

இதன்பின்னர், ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘முதல்வரின் பரிந்துரையை ஏற்று, அமைச்சர் டி.மனோ தங்கராஜுக்கு பால்வளத் துறை ஒதுக்கப்படுகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே பால்வளத் துறை அமைச்சராக மனோ தங்கராஜ் இருந்த நிலையில், அமைச்சரவையில் இருந்து கடந்த ஆண்டு அவர் நீக்கப்பட்டார். இந்நிலையில், அவருக்கு மீண்டும் அதே துறை ஒதுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.