சூரத்
பணமதிப்பிழப்பு, ஜி எஸ் டி போன்ற மத்திய அரசின் பொருளாதார நடவடிக்கைகளால் சீனா பயன் அடைந்துள்ளது என மன்மோகன் சிங் கூறி உள்ளார்.
பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ் ஆகிய நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து குஜராத் மாவட்டம் சூரத் நகரில் வர்த்தகர்கள் மாபெரும் ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள் நிகழ்த்தியது தெரிந்ததே. நேற்று சூரத் நகரில் நடந்த ஒரு நிகழ்வில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கலந்துக் கொண்டுள்ளார்.
அந்நிகழ்வில் அவர், “சென்ற வருடம் நவம்பர் மாதம் மத்திய அரசு அறிவித்த 500 மற்றும் 1000 நோட்டு செல்லாது என்னும் அறிவிப்பால் நாடு முழுதும் மக்கள் பாதிக்கப்ப்பட்டனர். அதன் பின் அமுலாக்கப்பட்ட ஜிஎஸ்டியால் அனைத்து வர்த்தகர்களும் தொழில் முனைவோரும் பாதிக்கப்பட்டனர். இதையெல்லாம் தவறு என்பதை ஒப்புக் கொள்ளாத இந்த பாஜக அரசு அதிலிருந்து எந்த ஒரு பாடமும் கற்கவில்லை என்பது மேலும் வேதனையான விஷயம்.
ஜி எஸ் டி அமுலாக்கத்தின் பின் நாட்டின் ஒட்டுமொத்த தொழிலும் பாதிக்கப்பட்டதை நீங்கள் அறிவீர்கள். இங்கு (குஜராத்தில்) ராஜ்கோட், மோபி, வாபி போன்ற இடங்களில் மண்பாண்டத் தொழில் முடங்கிப் போனது. சூரத்தில் ஜவுளித்துறை நசிந்து போனது. பாஜக அரசின் இந்த நடவடிக்கைகளால் நாட்டின் உற்பத்தி துறைக்கு சீரழிந்தது மட்டுமின்றி பொருளாதாரமும் பேரழிவைக் கண்டது. நாட்டில் விலைவாசிகள் தாறு மாறாக உயர்ந்தது.
இந்த விலைவாசி உயர்வைப் பயன்படுத்திக் கொண்டு சீனா பல பொருட்களை இங்கு ஏற்றுமதி செய்தது. கடந்த 2016-17 நிதியாண்டில் சீனா ரூ.1.96 கோடி மதிப்புள்ள பொருட்களை நம் நாட்டுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. அதுமட்டுமின்றி இந்த நிதி ஆண்டில் சுமார் ரூ2.41லட்சம் கோடி மதிப்புள்ள பொருட்களை இந்தியாவுக்கு சீனா ஏற்றுமதி செய்துள்ளது. பாஜக அரசு தனது பொருளாதார நடவடிக்கையால் நமது நாடு முன்னேற்றம் காணும் என சொன்னது தவறு. சீனாதான் இவர்களின் நடவடிக்கையால் பயன் பெற்றுள்ளது” எனக் கூறினார்.