கமதாபாத்.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் புல்லட் ரெயிலை ஒரு ஆடம்பர அழகு சாதனம் என விமர்சித்துள்ளார்.

பிரதமர் மோடியின் கனவுத்திட்டம் என வர்ணிக்கப்படும் புல்லட் ரெயில் திட்டத்துக்கு சமீபத்தில் அடிக்கல் நாட்டப்பட்டது.   மும்பையில் இருந்து அகமதாபாத் வரை செல்லும் இந்த ரெயிலுக்கு ரூ.88000 கோடி செலவாகும் என மதிப்பிடப் பட்டிருந்தது.   இந்தப் பணம் ஜப்பான் நாட்டிடம் இருந்து கடனாக பெறப் போவதாக அரசு அறிவித்திருந்தது.

அகமதாபாத்தில் நேற்று தொழில் முனைவோர் மற்றும் வர்த்தகர்களுடன் நடத்திய கலந்துரையாடலில் இந்த புல்லட் ரெயில் குறித்து முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கடுமையாக விமர்சித்துள்ளார்.  அவர், “இந்த புல்லட் ரெயில் திட்டம் என்பது ஒரு ஆடம்பர அழகு சாதனம்.   இந்த திட்டம் ஆறரை கோடி குஜராத் மக்களுக்கோ அல்லது அனைத்து இந்தியர்களுக்கோ எந்த ஒரு நன்மையும் தரப்போவதில்லை.  ரூ.88000 கோடி கடன் என்பது சாதாரணமானது இல்லை.  இது ஜப்பானுக்கு திருப்பித் தர வேண்டும்.

புல்லட் ரெயில் என்பதற்கு இவ்வளவு செலவு செய்யும்  பா ஜ க அரசு தற்போதைய ரெயில்வே பயணிகளுக்கு எந்த ஒரு வசதியையும் செய்து தரவில்லை.  மேலும் ரெயில்வே பாதுகாப்புக்கும் வேக அதிகரிப்பும் போதிய நிதி இல்லாத நிலையில் இந்த புதிய திட்டத்துக்கு அவசியமே இல்லை.   அரசின் தவறை சுட்டிக் காட்டினால் தேச விரோதி என முத்திரைக் குத்தப்படும் போது, இந்த திட்டத்தில் உள்ள குறைகளை சுட்டிக் காட்டினால் முன்னேற்ற விரோதி என முத்திரை குத்தப்படலாம்.” என கூறியுள்ளார்.