டில்லி
இந்தியப் பொருளாதார வளர்ச்சியை மீட்டெடுக்கப் பிரதமர் மோடிக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் 5 அம்ச வழிமுறைகளை அளித்துள்ளார்.

முன்னாள் பிரதமரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான மன்மோகன் சிங் ஒரு மாபெரும் பொருளாதார நிபுணர் ஆவார். இவர் காங்கிரஸ் அரசில் நிதி அமைச்சராகப் பதவி வகித்துள்ளார். தற்போது இந்தியப் பொருளாதார வளர்ச்சி கடும் சரிவைச் சந்தித்து வருவது குறித்து மன்மோகன் சிங் தனது வருத்தத்தைத் தெரிவித்துள்ளார். ஆனால் அரசு பொருளாதார வளர்ச்சி வீழ்ச்சி அடைந்துள்ளதை இதுவரை ஒப்புக் கொள்ளாமல் உள்ளது.
இந்நிலையில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அளித்த ஒரு பேட்டியில், “தற்போதைய மத்திய அரசு முழுப் பெரும்பான்மையுடன் அமைந்துள்ளது. அதுவும் தொடர்ந்து இருமுறை பெரும்பான்மை பெற்றுள்ளது. நான் முன்பு நிதி அமைச்சராக இருந்த போதும் சரி, பிரதமராக இருந்த போதும் சரி இத்தகைய பெரும்பான்மையுடன் இருந்ததில்லை. இருப்பினும் நாங்கள் கடந்த 1991 மற்றும் 2008 ஆம் ஆண்டின் பொருளாதார சீர்கேட்டை வெற்றிகரமாகச் சீர் செய்துள்ளோம்.
தற்போதைய பொருளாதார வளர்ச்சி வீழ்ச்சி நீண்ட நாட்களாக உள்ளது. ஏற்கனவே நாம் இந்த விவகாரத்தில் அதிக காலம் இழந்து விட்டோம். இனியாவது காலத்தை வீணாக்காமல் புத்திசாலித்தனமான முடிவை எடுக்க வேண்டும். ஏற்கனவே எடுத்த முடிவான பணமதிப்பிழப்பு பெரிய தவறுதலாக முடிந்து விட்டது. இனி எடுக்கப் போகும் முடிவு எதிர்கால தலைமுறையினர் நலன், வேலைவாய்ப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு எடுக்க வேண்டும்.
இதற்காக என்னிடம் ஐந்து அம்ச வழிமுறைகள் உள்ளன.
அவை
1. ஜிஎஸ்டி விகிதங்களை சரிப்படுத்த வேண்டும். இதனால் அரசுக்கு குறைந்த கால வருமான இழப்பு நேரிடலாம். ஆயினும் இது அவசியமானதாகும்.
2. கிராமப்புற நுகர்வுப் பொருட்களை அதிகரித்து விவசாயத்தை மேம்படுத்த வேண்டும். இதற்கான வழிமுறைகள் ஏற்கனவே காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் விவசாய சந்தை மேம்பாட்டுப் பிரிவில் அளிக்கப்பட்டுள்ளது.
3. பணப்புழக்க நெருக்கடியை உடனடியாக கவனிக்க வேண்டும். இந்த நடவடிக்கைகள் பொதுத்துறை வங்கிகளில் மட்டுமின்றி அனைத்து நிதி நிறுவனங்களிலும் மேற்கொள்ளப்பட வேண்டும்.
4. அதிக அளவில் வேலைவாய்ப்பு அளிக்கும் துறைகளான ஜவுளி, வாகனம், மின்னணு மற்றும் குறைந்த விலை வீட்டு வசதி ஆகியவற்றை முன்னேற்ற நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இதற்காக எளிய கடன் வசதிகளை நிதி நிறுவனங்கள் மூலம் அளிக்க வேண்டும்.
5. தற்போது அமெரிக்கா மற்றும் சீன நாடுகளுக்கு இடையில் வர்த்தகப் போர் நிலவி வருவதால் புதிய ஏற்றுமதி சந்தையை உருவாக்க நாம் முயல வேண்டும்.”
எனத் தெரிவித்துள்ளார்.
[youtube-feed feed=1]