டெல்லி: மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில், டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா சிபிஐ கைது செய்த நிலையில், அவரை 5 நாட்கள் சிபிஐ காவலில் வைத்து விசாரிக்க சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. சிசோடியா கைதுக்கு திமுக எம்.பி. டி.ஆர்.பாலு உள்பட எதிர்க்கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
டெல்லியில், புதிய மதுபான கொள்கை முறைகேடுகள் தொடர்பான விசாரணையை சிபிஐ விசாரித்து வருகிறது. இதுதொடர்பாக டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை சிபிஐ கைது செய்தது. இதைக் கண்டித்து ஆம் ஆத்மி கட்சியினர் நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் பாஜக அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து, மணீஷ் சிசோடியா இன்று டெல்லி சிபிஐ போஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். மணீஷ் சிசோடியாவிடம் கூடுதல் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று சிபிஐ கோரியது. இந்நிலையில், அதை ஏற்றுக்கொண்டு மணீஷ் சிசோடியாவை 5 நாட்கள் மார்ச் 4ஆம் தேதி வரை சிபிஐ காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
இந்த நிலையில் சிசோடியா கைதுக்கு, டெல்லி முதல்வரும், ஆம்ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
திமுக எம்.பி. டி.ஆர்.பாலுவும், சிசோடியா கைதுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். சிபிஐ போன்ற அமைப்புகள் மூலம் அடக்குமுறையை பாஜக கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார், அவ்வாறு கைவிடாவிட்டால் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் வட்டியும் முதலுமாகத் திருப்பிக் கொடுப்பார்கள் என்று எச்சரித்துள்ளார்.
இதுதொடர்பாக திமுக பொருளாளரும், நாடாளுமன்றக் கழகக் குழுத் தலைவருமான டி.ஆர். பாலு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆம் ஆத்மி கட்சியின் தலைமையிலான டெல்லி அரசின் புதிய மதுபானக் கொள்கை தொடர்பான வழக்கில், அம்மாநிலத்தின் துணை முதல்-மந்திரி மணிஷ் சிசோடியாவை சி.பி.ஐ கைது செய்திருப்பதற்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். முன்னதாக, விசாரணைக்கு ஆஜராகும் போதே தன்னைக் கைது செய்து விடுவார்கள் என மணிஷ் சிசோடியா சொன்னதைப் போலவே, மத்திய அரசின் சி.பி.ஐ அவரைத் தற்போது கைது செய்து, 5 நாள் காவலையும் பெற்றிருக்கிறது.
எதிர்க்கட்சிகள் மீது, மத்திய அரசின் விசாரணை அமைப்புகளை ஏவி விடும் போக்கு பாஜக.,விற்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மத்திய அரசின் கீழ் உள்ள அனைத்து அமைப்புகளையும் தனது கூட்டணிக் கட்சிகள் போல் ஆட்டுவித்து, எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விடும் போக்கு கவலைக்குரியது. Also Read – திமுக உடன் கூட்டணியா? – கமல்ஹாசன் பதில் இது ஜனநாயக விரோதம் மட்டுமல்ல, அப்பட்டமான சட்டவிரோதம். புலனாய்வு அமைப்புகளின் சுதந்திரம் இந்த ஆட்சியில் காற்றில் பறந்துள்ளது போல் வேறு எந்த ஆட்சியிலும் நடைபெற்றதில்லை என்பதையே எதிர்க்கட்சித் தலைவர்கள் ஒவ்வொருவராகக் குறிவைத்து கைது செய்யப்படுவதில் நிரூபிக்கப்பட்டு வருகிறது.
2014-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி அரசு பதவியேற்றது முதலே, தங்கள் கொள்கைக்கு எதிராகச் சிந்திக்கும் எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், சிந்தனையாளர்கள், கலைஞர்கள் என அனைத்துத் தரப்பினரையும் குறிவைத்து அச்சுறுத்தும் போக்கு தொடங்கி விட்டது. பாஜகவின் இத்தகைய அதிகார அச்சுறுத்தலுக்கான ஆக்டோபஸ் கரங்கள் 2024 நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வருகின்ற நிலையில், தற்போது எதிர்க்கட்சிகளை நோக்கி மிக வேகமாக, அராஜகமாக நீண்டு வருகிறது. “சி.பி.ஐ கைது செய்ய விரும்பவில்லை. ஆனால் அரசியல் அழுத்தம் காரணமாகவே இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது” என டெல்லி முதல்-மந்திரி அர்விந்த் கேஜ்ரிவால் முன் வைத்துள்ள குற்றச்சாட்டினையும் எளிதில் புறந்தள்ளிவிடமுடியாது.
இவ்வாறு கூறி உள்ளது.