மணிப்பூர்:
எங்களிடம் பேசிய மணிப்பூர் பெண்கள் உடைந்து போனார்கள் என்று மணிப்பூர் ஆளுநரை  சந்திப்புக்கு பின் பேசிய காங்கிரஸ் கட்சியின் மக்களவை துணைத் தலைவர் கவுரவ் கோகோய்  தெரிவித்தார்.

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் பைரன் சிங் தலைமையிலான பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் பெரும்பான்மை சமூகமாக உள்ள மைத்தேயி சமூகத்தினர் தங்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்த்துச் சலுகைகள் வழங்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதையடுத்து மைத்தேயி சமூகத்தைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துக் கடந்த மே 3 ஆம் தேதி மணிப்பூரின் சுராசந்த்பூரில் பழங்குடியின மக்கள் பாதயாத்திரை மேற்கொண்டனர். அப்போது, இருதரப்புக்கும் இடையே மோதல் வெடித்ததில், அது கலவரமாக மாறியது.

இந்தக் கலவரத்தைத் தொடர்ந்து கடந்த மே மாதம் 4 ஆம் தேதி குக்கி பழங்குடியினப் பெண்கள் இருவரை மைத்தேயி இன இளைஞர் கும்பல் ஒன்று ஆடைகளைக் களைந்து இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், நாட்டையே உலுக்கியுள்ள இந்தச் சம்பவத்திற்கு அரசியல் கட்சியினர், மனித உரிமை ஆர்வலர்கள் எனப் பலரும் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

இதையடுத்து வன்முறையால் பாதிக்கப்பட்டு உருக்குலைந்து இருக்கும் மணிப்பூர் மாநிலத்தின் கள நிலவரம் குறித்தும், பாதிக்கப்பட்ட மக்களின் நிலை குறித்தும் இந்தியா கூட்டணியைச் சேர்ந்த 21 எம்.பி.க்கள் கொண்ட குழு நேற்று மணிப்பூருக்கு நேரில் சென்று இரு குழுக்களாக ஆய்வு செய்து வருகிறது. 21 எம்.பி.க்கள் கொண்ட இந்தக் குழுவில் தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி, திருமாவளவன், ரவிக்குமார் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.

இந்நிலையில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் இன்று மணிப்பூர் மாநில ஆளுநர் அனுசுயா உய்கேவுடன் சந்தித்து பேசினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் மக்களவை துணைத் தலைவர் கவுரவ் கோகோய், நாங்கள் சுராசந்த்பூரில் 2, இம்பாலில் 1 மற்றும் மொய்ராங்கில் 1 என மொத்தம் 4 நிவாரண முகாம்களை பார்வையிட்டோம். எங்களிடம் பேசும்போது பெண்கள் உடைந்து போனார்கள். எல்லோரும் அமைதியை விரும்புகிறார்கள் மற்றும் அனைவரும் தங்கள் வாழ்க்கையை மீட்டெடுக்க விரும்புகிறார்கள். ஆளுநரை சந்தித்து எங்களது கருத்துகளை பகிர்ந்து கொண்டோம் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், நாடாளுமன்றத்தில் இது குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். மேலும் அதிக தாமதம் ஏற்பட்டுள்ளதாக நான் நம்புகிறேன். அரசாங்கம் ஒரு தீர்வை வழங்க வேண்டும் என்றும், மேலும் நாங்கள் அனைவரும் அரசாங்கத்தின் திட்டத்தைக் கேட்டு எங்கள் ஆலோசனைகளை வழங்க விரும்புகிறோம் என்று தெரிவித்தார்.