சென்னை:
மணிப்பூரில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை மீட்க நடவடிக்கை எடுக்க தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த சில நாட்களாக மணிப்பூர் மாநிலத்தில் குக்கி, மைத்தேயி என்ற இரு இன மக்களிடையே மோதல் ஏற்பட்ட நிலையில், வெடித்த கலவரத்தில் வீடுகள், தேவாலயங்கள் உள்ளிட்டவை தீ வைத்து எரிக்கப்பட்டன. மேலும், இந்த கலவரத்தில் 55 பேர் உயிரிழந்தனர்.
மேலும், மணிப்பூர் மாநிலத்தில் வசிக்கும் தமிழ் மக்கள் உட்பட ஏராளமானவர்கள் பாதுகாப்பற்ற நிலையில் சிக்கித் தவிக்கின்றனர். இதனையடுத்து, அங்கு சிக்கியுள்ள தமிழர்களை மீட்க நடவடிக்கை எடுக்க பலரும் கோரிக்கை வைத்த நிலையில், தற்போது அதற்கு உத்தரவிட்டுள்ளதாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக வெளியிடபட்டுள்ள அறிக்கையில் ” மணிப்பூர் மாநிலத்தில் மருத்துவம் மற்றும் பல்வேறு கல்லூரிகளில் படிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கக்கு தேவையான தண்ணீர், உணவு உள்ளிட்ட அனைத்து உதவிகளும் அம்மாநில அரசு மற்றும் மணிப்பூர் தமிழ்ச் சங்க பிரதிநிதிகளுடன் இணைந்து ஏற்பாடு செய்து தரப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், அங்கு மருத்துவம் பயிலும் மாணவர்கள் கல்லூரி விடுதிகளில் பாதுகாப்பான நிலையில் உள்ளதால் தற்சமயம் தமிழ்நாட்டிற்கு திரும்பிவர விருப்பம் இல்லை என தெரிவித்துள்ளார்களாம். அதே தமிழ்நாட்டைச் சேர்ந்த 5 மாணவர்களை, தமிழகத்திற்கு அழைத்துவர மறுவாழ்வுத் துறை மூலமாக விமான பயணச் சீட்டுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனவும், இவர்கள் இன்று இரவு சென்னை விமான நிலையம் வந்தடைவார்கள் என்றும் அவர்கள் அங்கிருந்து அவர்களது சொந்த ஊர்களுக்கு சென்று சேர்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் துறையால் செய்யப்பட்டுள்ளது” என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.