பழங்குடியினருக்கும், பழங்குடியினர் அல்லாதோருக்கும் இடையே மோதல் மூண்டதை அடுத்து மணிப்பூர் மாநிலம் முழுவதும் வன்முறை தீவைப்பு போன்ற அசம்பாவித சம்பவங்கள் அரங்கேறியுள்ளது.

மெய்டீஸ் என்ற பழங்குடியினர் அல்லாதோர் தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க கோரிக்கை வைத்து வருகிறன்றனர்.

இவர்களை எஸ்.டி. பிரிவில் சேர்க்கக்கூடாது என்று பழங்குடியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் பழங்குடி இனத்தைச் சேர்ந்த மணிப்பூர் அனைத்து பழங்குடியின மாணவர் அமைப்பு சார்பில் மாநிலத்தின் 7 மலை மாவட்டங்களில் நேற்று பேரணிக்கு அழைப்பு விடுத்தனர்.

பழங்குடியினர் அதிகம் வசிக்கும் இந்த மாநிலத்தின் வெவ்வேறு பழங்குடி பிரிவுகளை சேர்ந்த மக்கள் இந்த பேரணியில் பங்கேற்றனர்.

அதேவேளையில் தங்களை எஸ்.டி. பிரிவில் சேர்க்கக்கோரி மெய்டீஸ் சமூகத்தைச் சேர்ந்தவர்களும் பேரணி நடத்தினர்.

பேரணியின் போது இருபிரிவினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறியதை அடுத்து மலைப்பாதைகளில் டயர்களை கொளுத்தி ப் போட்டதோடு கடைகள் மற்றும் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டது. கலவரக்காரர்களை போலீசார் கண்ணீர் புகை குண்டு வீசி கலைத்தனர்.

இதனையடுத்து 8 மாவட்டங்களில் இன்டர்நெட் சேவை துண்டிக்கப்பட்டது. இருந்தபோதும் இரவு முழுவதும் கலவரம் தொடர்ந்தது மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தீவைப்பு உள்ளிட்ட வன்முறை சம்பவங்கள் அரங்கேறின.

இந்த நிலையில், வன்முறையைக் கட்டுப்படுத்த ராணுவத்தினர் வரவழைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.