மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மகன்கள் போல் நடித்து, மணிப்பூர் எம்எல்ஏக்கள் பலருக்கு முதல்வர் பதவியை வாங்கித் தருவதாக வாக்குறுதி அளித்து, கோடிக்கணக்கான ரூபாய் பணம் கேட்ட குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் புதன்கிழமை தெரிவித்தனர்.

மணிப்பூர் முதல்வர் பதவியை பிரேன் சிங் ராஜினாமா செய்ததை அடுத்து, பிப்ரவரி 13ம் தேதி முதல் அங்கு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொண்டு, மணிப்பூர் எம்எல்ஏக்கள் பலரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, தங்களை அமித் ஷாவின் மகன் ஜெய் ஷா என்று அறிமுகப்படுத்திக் கொண்டதுடன் முதல்வர் பதவிக்கு ரூ. 4 கோடி பேரம் பேசியதாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக காவல் நிலையத்தில் இரண்டு எஃப்ஐஆர்கள் பதிவு செய்யப்பட்டன. விசாரணையைத் தொடங்கியுள்ள போலீசார், குற்றம் சாட்டப்பட்டவர்களை உத்தரகண்டிலிருந்து இம்பாலுக்கு அழைத்து வந்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் உத்தரபிரதேசத்தின் இட்டா மாவட்டத்தைச் சேர்ந்த உவைஷ் அகமது, டெல்லியின் காஜிபூரைச் சேர்ந்த கௌரவ் நாத் மற்றும் பிரியான்சு பந்த் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.